Published : 30 Aug 2017 09:31 AM
Last Updated : 30 Aug 2017 09:31 AM

கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்: மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது

கூடங்குளம் முதலாவது அணு உலையில் நேற்று காலை 6.37 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டது.

கூடங்குளம் முதலாவது அணு உலையில் எரிபொருளாக யுரேனியம் ஆக்ஸைடு பயன்படுத்தப்படுகிறது. இங்கு, 7 ஆயிரம் மணி நேரம் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மாற்றி, புதிதாக எரிபொருள் நிரப்பும் பணிஏப்ரல் 13-ம் தேதி தொடங்கியது. இதனால் இந்த அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. அணு உலையை குளிர்விக்கும் நடவடிக்கை, நீராவி வெளியேற்றும் உபகரணங்கள் சீரமைப்பு ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் முடிவடைய 65 நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 133 நாட்களாக இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று, 24-ம் தேதி நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து, முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்க அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியம் ஒப்புதல் அளித்தது. அணுக்கரு பிளவு தொடர்வினை கடந்த 24-ம் தேதி காலை 9.28 மணிக்கு தொடங்கியது. இதன் அடுத்தகட்டமாக நேற்று மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டது.

அணுமின் நிலைய வளாக இயக்குநர் எஸ்.வி.ஜின்னா கூறும்போது, ‘முதலாவது அணுஉலையில் நேற்று மதியம் 12.30 மணிக்கு 300 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஆயிரம் மெகாவாட் உற்பத்தி எட்டப்படும்.

2-வது அணுஉலையில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. முதல் இரு அணுஉலைகளில் இருந்தும் இதுவரை 18,758 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x