Published : 16 Aug 2017 09:58 AM
Last Updated : 16 Aug 2017 09:58 AM

மாநகராட்சி வாங்கிய தூர் வாரும் இயந்திரங்களில் ஆகாயத் தாமரை செடிகளைஅகற்றும் சிறப்பு வசதி இல்லை: ரூ.24 கோடி இயந்திரங்கள் விரயமா?

சென்னை மாநகராட்சி வாங்கியுள்ள நவீன பன்னோக்கு தூர்வாரும் ரோபோ இயந்திரங்களில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் சிறப்பு வசதி இல்லாததால், அந்த செடிகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொசுத் தொல்லை அதிகரித்து வருவதால் டெங்கு, சிக்குன் குன்யா போன்ற வைரஸ் நோய் கள் பரவுவதுடன், கொசுக்கடி யால் பொதுமக்கள் இரவு தூக்கத்தை தொலைத்து வருகின்ற னர்.

கொசுக்கள் உற்பத்திக்கான காரணத்தை மாநகராட்சி நிர்வாகம் ஆராய்ந்தபோது, சென்னை யில் உள்ள கால்வாய்களில் மிதக்கும் கழிவுப்பொருட்கள், அதில் வளர்ந்திருக்கும் ஆகாயத் தாமரைச் செடிகளால் நீர்வழிந்தோடாமல் தேங்கியிருப்பது, கொசுக்கள் உற்பத்திக்கு சாதகமாக அமைவது கண்டுபிடிக்கப் பட்டது.

வெளிநாட்டு இயந்திரங்கள்

ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுத்த நிலையில், அப்பணிகளில் ஆட்களைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றமும், தேசிய துப்புரவாளர் ஆணையமும் தடை விதித்ததுடன், நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கின.

இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 4 மீட்டருக்கும் அதிகமான அகலம் கொண்ட நீர்வழித்தடங்களில் சுத்தம் செய்ய பின்லாந்து நாட்டிலிருந்து ரூ.4.5 கோடி செலவில் ‘ஆம்பிபியன் வெஹிக்கில்’ என்ற நவீன தூர் வாரும் இயந்திரத்தையும், 3.5 மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்ட நீர்வழித் தடங்களை சுத்தம் செய்ய சுவிட்சர்லாந்திலிருந்து ரூ.19.65 கோடியில்3 நவீன பன்னோக்கு தூர் வாரும் ரோபோ இயந்திரங்களையும் சென்னைமாநகராட்சி வாங்கியுள்ளது.

ஆம்பிபியன் வாகனத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றுவதற்கான பிரத்யேக சல்லடை போன்ற உபகரணம் வழங்கப்பட்டுள்ளது. இதைக்கொண்டு ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றும்போது, நீர் கீழேகொட்டிவிடும். செடிகளை எளிதாக அகற்ற முடியும்.

ஆனால், ரோபோ இயந்திரத்தில் அத்தகைய வசதி இல்லை. தூர் வாருவதற்கானஉபகரணம் மட்டுமே உள்ளது. அதைக் கொண்டே ஆகாயத் தாமரை செடிகளையும் அகற்ற வேண்டியுள்ளது. அப்போது நீரும் சேர்ந்து வருவதால், செடிகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தை வாங்குவதற்காக, கடந்த 2015-ல் நிறைவேற்றப்பட்ட மாநகராட்சி மன்றத் தீர்மானத்தில், மனிதர்களைக் கொண்டு கால்வாய்களில் உள்ள ஆகாயத்தாமரை, குப்பை கழிவுகள் மற்றும் மண்களை அகற்றும் பணிகளுக்காக வாங்கப்படுவதாகவும், இந்த இயந்திரங்களின் செயல்பாடுகளை, மாநகராட்சி அதிகாரிகள், மும்பை சென்று பார்வையிட்டு அளித்த அறிக்கை அடிப்படையில் வாங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள் ளது.

நோக்கம் நிறைவேறுமா?

அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தபோது, இந்த ரோபோ இயந்திரத்தில், ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றும் சிறப்பு வசதி இல்லாததை கவனிக்காமல், அதை வாங்க பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சுமார் ரூ.24 கோடி மதிப்புள்ள இந்த இயந்திரங்கள் பயனற்று போகுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ரோபோ இயந்திரம் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றுவதற்கு மட்டும் வாங்கவில்லை. சிறு கால்வாய்களில் தூர்வாரும் பணிக்காகவும் வாங்கப்பட்டது. அந்த இயந்திரங்கள் பல்வேறு பணிகளில் சிறப்பாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x