

அதிமுக அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தை நடப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறிய நிலையில், தொண்டர்களை அவர் குழப்பு வதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், தங்கள் நிபந்தனைகளை முதல்வர் கே.பழனிசாமி அணி யினர் ஏற்காததால், பேச்சுவார்த்தை குழுவை கலைப்பதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். அதன் பின், டிடிவி தினகரன் தலைமை யில் 3-வதாக ஒரு அணி உருவானது.
இந்நிலையில், ஓபிஎஸ் அணி யைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன், முதல்வரையும் அமைச்சரையும் நேற்று முன்தினம் இரவு சந்தித்ததாக தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து, மற்றொரு முன்னாள் அமைச்சரும் முதல்வர் பழனிசாமியை நேற்று காலை சந்தித்ததாக பேசப்பட்டது. இந்த தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் தரப்பில் இருந்து 3 பேர் பழனிசாமி அணிக்கு வர உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து நிருபர்களிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று காலை கூறும்போது, ‘‘இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. குழு கலைக்கப்பட்டாலும் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் எங்களைச் சந்தித்து வருகின்றனர். இரு அணிகளும் இணைவதற்கான சூழல் அதிகமாக உள்ளது. கட்சியை வழிப்படுத்துவதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக் கப்படும்’’ என்றார்.
இந்நிலையில், ஓபிஎஸ் அணி யைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:
நாங்கள் 2 கோரிக்கைகளை வைத்தோம். இடையில் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு அவர்கள் குழு அமைத்தனர். நாங்களும் குழு அமைத்தோம். சசிகலா சிறைக்கு சென்றாலும் அவரது கட்டுப்பாட்டில்தான் கட்சி உள் ளது. இன்னும் சசிகலா தலைமை யில்தான் செயல்படுகிறோம் என்பதை அழுத்தமாக காட்டி வருகின்றனர். அதனால் பேச்சு வார்த்தை நடத்தவில்லை.
ஓபிஎஸ்ஸுக்கு வரவேற்பு
ஆனால், பேச்சுவார்த்தை நடக் கிறது என அமைச்சர் ஜெயக் குமார் பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். செயல்வீரர்கள் கூட்டத்துக்கு செல்லும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அரசு செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அவர்கள் நடத்தியபோது, எங்கும் வரவேற்பு இல்லை. கூட்டமும் இல்லை. அதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த இதுபோன்ற கருத்துகளை ஜெயக்குமார் கூறி வருகிறார். இதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.
சமீபகாலமாக இரு தரப் பினரும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை நிறுத்தியிருந்த நிலையில், மீண்டும் தற்போது மோதல் தொடங்கியுள்ளது.
தினகரன் மும்பை பயணம்
இதற்கிடையே, டிடிவி தினகரன் திடீர் பயணமாக நேற்று காலை விமானத்தில் மும்பை புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பாக அவரது ஆதரவாளர்கள் கூறும்போது, ‘‘சட்ட வல்லுநர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக அவர் மும்பை சென்றிருக்கலாம்’’ என்றனர்.