Published : 26 Aug 2017 08:37 AM
Last Updated : 26 Aug 2017 08:37 AM

தமிழக அரசியல் நிலவரம் : அமித் ஷா ஆலோசனை

தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதிமுக அணிகள் இணைப்பால் கட்சியிலும், ஆட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக தினகரன் தரப்பினரும், திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மோடி வாழ்த்து

அதனை உறுதிப்படுத்துவதுபோல முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த 2 மாதங்களில் 5 முறை பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். இரு அணிகள் இணைந்து ஓபிஎஸ் துணை முதல்வராகப் பொறுப்பேற்றதும் அவருக்கு உடனடியாக மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்கள் 19 பேர் ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதால் அடுத்து என்ன செய்வது? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்தால் என்ன செய்வது? பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால் பழனிசாமி அரசு தப்புமா? சட்டப்பேரவையை முடக்கினால் அல்லது கலைத்தால் சட்டச் சிக்கல்கள், நீதிமன்ற தடை வருமா? தேர்தல் நடந்தால் யாருக்கு சாதகமாக இருக்கும்? பழனிசாமி, ஓபிஎஸ்.ஸால் அதிமுகவை கட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? என பல்வேறு கோணங்களில் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ''தமிழக அரசியல் நிலவரத்தை பிரதமர் மோடி, அமித்ஷா இருவருமே நேரடியாக கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழகத்தில் இருக்கும் முக்கியப் பிரமுகர் உதவிகரமாக இருந்து வருகிறார். உடனடியாக தேர்தல் நடந்தால் திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என மோடியும், அமித்ஷாவும் கருதுகின்றனர்.

எனவே, பாஜகவைப் பொறுத்தவரை வரும் 2019 மக்களவைத் தேர்தலோடு சேர்த்துதான் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த விரும்புகிறது இது தொடர்பாகவே அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார் என்றார்.

பழனிசாமி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டால் சட்டப்பேரவையை கலைக்காமல் முடக்கி வைத்து ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவதே மோடி, அமித்ஷாவின் திட்டமாக உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x