

"காங்கிரஸ் கட்சியை விட்டு வாசன் வெளியே போவார் என்பதையே இன்னும் நான் நம்பவில்லை. அவர் இருக்க வேண்டிய இடம் இதுதான்" என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
தமிழக காங்கிரஸியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாவில், அவருக்கு முன்னாள் தலைவர் ஞானதேசிகன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் பேசிய இளங்கோவன், "எதிர்பாராத நேரத்தில் எனக்கு மிகப்பெரிய பொறுப்பை தந்திருக்கிறார்கள். இது மிகவும் கஷ்டமான வேலை என்பது எனக்குத் தெரியும். ஆனால், இங்கே வந்துள்ள தொண்டர்களைப் பார்க்கும்போது கடுமையான உழைப்பின் காரணத்தால் மீண்டும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க முடியும் என தெரிகிறது.
சக்கரம் இன்று கீழே இருக்கிறது, அது மேலே வர வேண்டியதுதான் பாக்கி. காங்கிரஸை வளர்க்க வேண்டும் என்பது நாங்கள் அமைச்சராக வரவேண்டும் என்பதற்காக அல்ல. தமிழகம் உருப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
தமிழகத்தில் எவ்வளவு பெரிய தலைவர்கள் வந்தாலும், காமராஜருக்கு இணையாக முடியாது. அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றபோது இரண்டே மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. ஆனால், அவரது காலத்தில் 16 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
எனக்கு கோஷ்டிகளில் நம்பிக்கை இல்லை. காங்கிரஸ்காரர்கள் அனைவரும் ஒரே கோஷ்டிதான். அந்த கோஷ்டிக்கு தலைவர் சோனியா காந்தி.
காங்கிரஸைவிட்டு வாசன் வெளியே போவார் என்பதையே இன்னும் நான் நம்பவில்லை. அவர் இருக்க வேண்டிய இடம் இதுதான். அவர் இங்குதான் இருப்பார் என்று நம்புகிறேன். சில நேரங்களில் கோபம், வெறுப்பு வரும்போது சில கருத்துகள் கூறப்படும். அதை உண்மையான கருத்தாக நினைக்கக் கூடாது. கட்சி உறுப்பினர் அட்டைகளில் காமராஜர் படமின்றி இதுவரை நாங்கள் அச்சடித்தது இல்லை. காமராஜர் இல்லாமல் இங்கு காங்கிரஸ் இல்லை" என்றார் இளங்கோவன்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சு.திருநாவுக்கரசர், ஜெயந்தி நடராஜன், பிரபு, முன்னாள் மாநிலத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, குமரி அனந்தன், நிர்வாகிகள் எச்.வசந்தகுமார், டாக்டர் செல்லகுமார், ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் கோபிநாத், விஜயதாரணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.