Published : 14 Aug 2017 06:01 PM
Last Updated : 14 Aug 2017 06:01 PM

ஊழல், சீர்கேடுகளிலிருந்து தமிழகத்திற்கு விடுதலை கிடைக்க உழைக்க வேண்டும்: அன்புமணி சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

71-வது சுதந்திர தினம் நாளை (செவ்வாய், 15-8-17) கொண்டாடப்படும் நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சுதந்திரதின வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் 71-ஆவது விடுதலை நாள் நாளைக் கொண்டாடப்படும் நிலை தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் வாழும் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டாலும், அதற்குரிய வளர்ச்சியும், முன்னேற்றமும் இன்னும் எட்டப்படவில்லை. குறிப்பாக தமிழகத்தில் சாத்தியமான அளவுக்கு முன்னேற்றம் காணப்படவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் 1.40 கோடி இளைஞர்கள் படித்து முடித்து விட்டு வேலையில்லாமல் வாடுகின்றனர். பொறியியல் படித்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காததால் மாதம் ரூ.3,000, ரூ.5,000 ஊதியத்திற்கு கிடைத்த வேலையை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கரும்பு வெட்டுதல், சமையல் பணி உள்ளிட்ட பணிகளை செய்து வாழ்வாதாரம் தேட வேண்டிய நிலை தமிழக இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 500&க்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. உணவு படைக்கும் கடவுள்களான உழவர்களின் நலன்களைக் காக்க எந்த அரசும் இதுவரை முன்னுரிமை அளிக்கவில்லை. டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட சுகாதாரக் கேடுகளுக்கு தமிழகத்தின் இன்னும் தீர்வு காணப்படவில்லை.

அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் தான் நிறைந்து காணப்படுகிறது. இந்தியாவில் தமிழகம் தான் அதிக நகர்மயமான மாநிலம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பெருமைப்பட எதுவுமில்லை. கிராமங்கள் வளர்ச்சியடைந்து நகர்ப்பகுதியானால் அது மகிழ்ச்சியான விஷயமாகும். ஆனால், தமிழகத்தில் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு இல்லாததால் பொதுமக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததால் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. இது வருத்தத்திற்குரியதே தவிர பெருமைக்குரியது அல்ல.

இந்தியா சமூக, மதச்சார்பற்ற குடியரசு என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இன்று இந்த அடையாளத்தை மாற்றி ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற அடையாளத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. இந்திய ஜனநாயகம் கிராமங்களில் தான் வாழ்கிறது என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், இன்று மாநிலத்திற்கு சுயாட்சி கிடைக்கவில்லை... உள்ளாட்சிகளுக்கு ஒரு அதிகாரமும் இல்லை என்ற நிலை தான் காணப்படுகிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இதற்காகவா மகாத்மா காந்தியும், மற்ற தலைவர்களும் போராடி விடுதலை பெற்றுத் தந்தனர் என்ற எண்ணம் எழுகிறது.

இந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் தரமானக் கல்வி, படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு, உழவர்கள் தற்கொலை இல்லாத உன்னதமான சூழல், வேளாண்மைக்கு முன்னுரிமை, தொழில்துறையில் முதன்மை மாநிலம் என்பன உள்ளிட்ட பெருமைகள் கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்றும் திறமையும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அரசு அமையவும், அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு உண்மையான விடுதலையை பெற்றுத் தரவும் இந்த நாளில் இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x