Published : 09 Aug 2017 08:49 AM
Last Updated : 09 Aug 2017 08:49 AM

கிரானைட் முறைகேடு விசாரணையின்போது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மனு

கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணையின்போது தனக்கும், தனக்கு உதவிய நபருக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் நடைபெற்ற கிரானைட் கனிம வள முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சட்ட ஆணையராக நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அவரது தலைமையிலான குழுவினர் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் சகாயம் குழுவில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவருக்கு சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் சகாயம் தரப்பில் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கிரானைட் முறைகேடு குறித்து நான் விசாரணை நடத்தியபோது கடந்த 2014 மற்றும் 2015 ஆகிய காலகட்டங்களில் எனக்கு குமார் மற்றும் கஸ்தூரி ரங்கன் ஆகிய பெயர்களில் கொலை மிரட்டல் கடிதங்கள் வந்தன. அதில், கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணையைத் தொடர்ந்தால் கொலை செய்து புதைத்து விடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்தக்கடிதம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மதுரை தல்லாகுளம் போலீஸார், இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

அதுபோல தொழில்நுட்ப ரீதியாக ஆய்வுகள் மேற்கொள்ள விசாரணைக்கு உதவியாக இருந்த பார்த்தசாரதி என்பவர் திடீரென சாலை விபத்தில் இறந்தார். அந்த வழக்கையும் மீண்டும் விசாரிக்க வேண்டியுள்ளது. விவசாயிகளுக்கு விமோசனம் இந்த விசாரணையில் எனக்கு உதவியாக செயல்பட்ட சேவற்கொடியோனுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் இருந்து வருகிறது. அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திடீரென கடந்த மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அவரது வீடும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தீக்கிரை யாக்கப்பட்டுள்ளது.

அதுபோல கிரானைட் குவாரிகளால் பாதிக் கப்பட்ட மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தாலுகா விவசாயிகளுக்கும் இன்னும் விமோசனம் கிடைக்க வில்லை. விசாரணையின்போது எனக்கு உதவிய பலரை பாதுகாக்க வேண் டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே சேவற்கொடியோன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நபர் களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந் தார்.

அதையடுத்து நீதிபதிகள், ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் விசா ரணை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் செப்டம்பர் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x