Published : 20 Aug 2017 09:25 AM
Last Updated : 20 Aug 2017 09:25 AM

காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மேற்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா மற்றும் தமிழகம் இடையே நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. ஒருசில இடங்களில் கனமழை யும் பெய்துவருகிறது. தலைநகர் சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும், தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழை

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

செங்குன்றத்தில் 13 செமீ, வால்பாறையில் 11 செமீ, சேத்தியாத்தோப்பு, சிதம்பரத்தில் தலா 9 செமீ, சோழவரத்தில் 8 செமீ, சின்னகல்லாறு, வேதாரண்யத்தில் தலா 7 செமீ, பெரியாறில் 6 செமீ, தாமரைப்பாக்கம், காவேரிப்பாக்கம், அணைக்கரன்சத்திரத்தில் தலா 5 செமீ, கலவை, மதுக்கூர், பட்டுக்கோட்டை, ஆவடி யில் தலா 4 செமீ, சென்னையில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திர கடலோரத்தில் காற்றழுத்தம்

வடமேற்கு வங்கக் கடல் மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது வடக்கு ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வருகிறது. இது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x