Published : 03 Aug 2017 04:27 PM
Last Updated : 03 Aug 2017 04:27 PM

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: அன்புமணி

தமிழகத்தில் பரவிய டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மேற்கு மாவட்டத்தை மட்டும் அச்சுறுத்திக் கொண்டிருந்த டெங்கு காய்ச்சல் இப்போது தலைநகரம் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறது. காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சேலம், கோவை, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள்தான் டெங்கு காய்ச்சலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கோவை, சேலம் நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் 5 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனர்.

தமிழகத்தின் தென் எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி சென்னை வரை அனைத்து மாவட்டங்களிலும் டெங்குவின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு காய்ச்சலை முழுமையாக ஒழிப்பது என்பது உடனடியாக சாத்தியமில்லை என்றாலும் கூட, கடந்தகால அனுபவங்களின் மூலம் டெங்கு காய்ச்சல் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும், அதையும் தாண்டி டெங்கு பரவினால் அதை நவீன மருத்துவம் மூலம் குணப்படுத்துவதும் சாத்தியமான விஷயம் தான்.

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாகவே டெங்கு காய்ச்சல் அழையா விருந்தாளியாக வந்து செல்லும் நிலையில், வட்டார மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்குக் கூட வசதிகள் செய்யப்படவில்லை என்பதிலிருந்தே சுகாதாரத்துறை எந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்த வேண்டுமானால், முதலில் அந்தக் காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவி வருகிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் எதைக் கேட்டாலும், அதெல்லாம் ஒன்றும் தமிழகத்தில் இல்லை என்று பதில் கூறுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். டெங்குவின் பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக இருப்பதற்கு இதுதான் முதன்மையான காரணமாகும்.

டெங்கு அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் பதற்றம் அடையத் தேவையில்லை. டெங்கு காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் எளிதில் குணமடைந்து விடலாம். பப்பாளி இளைச்சாறு, மலை வேம்பு சாறு ஆகியவற்றை காய்ச்சி குடிப்பதன் மூலமும், நில வேம்பு கசாயத்தை அருந்துவதன் மூலமும் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்; குணப்படுத்தவும் முடியும். இதற்கெல்லாம் மேலாக டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது முக்கியமாகும்.

டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் ராமதாஸால் உருவாக்கப்பட்ட பசுமைத்தாயகம் அமைப்பு சிறப்பாக பங்களித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் வழங்கப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் நிலவேம்பு கசாயம் மக்களுக்கு வழங்கப்படும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x