Published : 01 Aug 2017 09:10 AM
Last Updated : 01 Aug 2017 09:10 AM

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மலேசியாவில் எம்ஜிஆர் சிலை திறப்பு: வி.ஜி.சந்தோசம் தகவல்

மலேசியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், எம்ஜிஆரின் முழு உருவச் சிலை திறக்கப்படுகிறது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் செம்படம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கிறது. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் மாநாட்டில் ஆறரை அடி உயரமுள்ள எம்ஜிஆர் முழு உருவச் சிலை நிறுவப்பட உள்ளது. இந்நிலையில் எம்ஜிஆர் சிலை வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் (மகளிர்) நேற்று நடந்தது.

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் வி.ஜி.சந்தோசம் எம்ஜிஆர் சிலையை வழங்க, மாநாட்டின் தலைவர் எஸ்.பி.மணிவாசகம் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், பாபுஜி சுவாமிகள், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் விஜிபி ராஜாதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் விஜிபி சந்தோசம் பேசியதாவது: விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் உலகைத் தமிழால் உயர்த்துவோம் என்ற நோக்குடன் இந்தியாவிலும், உலகில் பல்வேறு நாடுகளில் திருவள்ளுவர் சிலையை அமைத்தும், திருக்குறள் மாநாடு நடத்தியும் வருகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் மனதில் எம்ஜிஆர் உயர்ந்த இடத்தில் உள்ளார். எம்ஜிஆர் தமிழ் மீதும், தாய் மீது அதிகம் பற்றுக் கொண்டவர்.

மலேசியாவில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாநாட்டில் எம்ஜிஆர் சிலை நிறுவப்படுகிறது. மலேசியா நாட்டு பிரதமர் ரத்தோஸ்ரீ நஜிப் எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x