

சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அம்மா மருந்தகங்கள் திறப்பு விழாவுக் காக காத்திருக்கின்றன. அதே நேரத்தில் பண்ணை பசுமை காய் கறிக் கடைகள், அம்மா மருந்த கங்களால் கூட்டுறவு சங்கங்கள் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மருந்துக் கடை கள் திறக்கப்பட்டன. வெளிச் சந்தையை விட மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுபோல் 210 கூட்டுறவு மருந் தகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஜூன் மாதத்தில் அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டன. அவற்றையும் கூட்டுறவுச் சங்கங்களே நடத்தி வருகின்றன. இதுபோல் மேலும் 90 இடங்களில் அம்மா மருந்தகங்களைத் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் கடைகளுக்கு இடம் பார்த்து, அம்மா மருந்த கம் என்று பெயர்ப்பலகை கூட வைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் மாத இறுதிவாக்கில் திறக்கப்படு வதற்குத் தயாராக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அவை திறக்கப்படாமல் உள்ளன.
இதுதவிர, காய்கறிகளின் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் 52 இடங்களில் குறைந்த விலையில் காய், கனி வகைகளை விற்பனை செய்யும் பண்ணை பசுமை காய்கறிக் கடைகளும் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.
இவை குறித்து கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் சென்னை நங்கநல்லூர், சேலம் (2 கடைகள்), விருதுநகர் (2), ஈரோடு, மதுரை (2), சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட 10 இடங்களில் அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டன. இவற்றில் 15 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகளை விற்பனை செய்து வருகிறோம். இதுபோல், மேலும் 90 இடங்களில் கடைகளைத் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த கடைகளுக்கு மருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு பி.பார்ம்., டி.பார்ம். படித்தவர்களை நியமிப்பதால் அவர்களுக்குத் தரவேண்டிய ஊதியம், கடை வாடகை, முன்பணம், குளிர்சாதனப் பெட்டி, குளிர்சாதன வசதி காரணமாக அதிகரிக்கும் மின்கட்டணம் ஆகியன போன்ற பல்வேறு செலவு களையும் கூட்டுறவுச் சங்கங்களே ஏற்க வேண்டியுள்ளது. இதுபோன்ற அம்சங்களைத் தாண்டி லாபம் ஈட்டினால் மட்டுமே கூட்டுறவுச் சங்கங்கள் நொடியும் நிலை ஏற்படாது.
இதுமட்டுமின்றி, தமிழகத்தில் 52 இடங்களில், பண்ணை பசுமை காய்கறிக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஆரம்ப காலத்தில் குறைந்த விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்து வந்தோம். இப்போது, சந்தை விலைக்கும், எங்களது விலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதனால் முன்புபோல் பரபரப்பான விற்பனையும் இல்லை. மேலும், சில நேரங்களில் காய்கறிகள் வரும்போதே 5 சதவீதம் வரை கெட்டுப்போய்விடுகின்றன. விற்காமல் போகும் காய்கறிகளை கணக்கில் எடுத்தால் சாதாரணமாக 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வீணாகிப் போகின்றன. இந்த இழப்பையெல்லாம் கூட்டுறவுச் சங்கங்கள்தான் சுமக்க வேண்டி யுள்ளது.
இந்த நிலை நீடித்தால் கூட்டுறவுச் சங்கங்கள் நொடிந்து போகும் நிலை ஏற்பட்டு விடும். எனவே, அம்மா மருந்தகங்களை யும், பண்ணை பசுமை கடைகளை யும் அரசே நேரடியாக நடத்த வேண் டும். இல்லையேல் கூட்டுறவு சங்கங் களுக்கு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகத்தில் தற்போது 17 அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 40 தயார் நிலையில் உள்ளன. இந்த மருந்த கங்களின் கட்டமைப்பு வசதிகளுக் காக தலா ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பண்ணை பசுமை காய்கறிக் கடைகளில் 10 சதவீத இழப்பு ஏற்படலாம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்தந்த கூட்டுறவு சங்க அலுவலர்கள்தான் இந்த இழப்பை கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.