Published : 13 Aug 2017 03:22 PM
Last Updated : 13 Aug 2017 03:22 PM

ராமேசுவரம் அருகே உயிருடன் கரை ஒதுங்கிய புள்ளி சுறா

ராமேசுவரம் அருகே வேதாளை கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய புள்ளி சுறா மீனை, அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் வனத்துறையினர் மீட்டு ஆழ்கடலில் விட்டனர்.

மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல் பகுதிகளில், டால்பின், கடல் பசு, சுறா, திமிங்கலம் உள்ளிட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகமாக வசிக்கின்றன. இவை கடலில் ஏற்படும் இயற்கை சீதோஷ்ண மாற்றங்கள், விபத்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குவது தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை ராமேசுவரம் அருகே உள்ள வேதாளை என்ற மீனவ கிராமத்தில் சுமார் 100 கிலோ எடை கொண்ட புள்ளி சுறா ஒன்று கரை ஒதுங்கி துடித்துக்கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனே மண்டபம் வனத்துறை அலுவலர்களிடம் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மண்டபம் வனச்சரகர் சதீஷ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ததில் சுமார் 10 அடி நீளமுள்ள 5 வயதுள்ள பெண் புள்ளிச் சுறா இரை தேடும்போது, ஆழம் குறைந்த பகுதிக்கு வந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என்பது தெரிய வந்தது.

உடனே அந்தப் பகுதி மீனவ இளைஞர்களின் உதவியுடன் புள்ளி சுறாவை மீட்டு, ஆழமான கடற்பகுதியில் வனத்துறையினர் கொண்டுபோய் விட்டனர். ஆழமான கடல் பகுதிக்குள் சென்றதும் புள்ளிச் சுறா உற்சாகமாக நீந்திச் சென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x