Published : 11 Aug 2017 12:20 PM
Last Updated : 11 Aug 2017 12:20 PM

உட்கட்சி பூசல்களுக்கு விரைவில் தீர்வு காண்க: அதிமுகவுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் தங்கள் கட்சிக்குள் நிலவும் பூசல்களுக்கு நல்ல தீர்வு காண முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் அதே நேரத்தில் ஆட்சி, அதிகாரத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் தங்கள் கட்சிக்குள் நிலவும் பூசல்களுக்கு நல்ல தீர்வு காண முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் அதே நேரத்தில் ஆட்சி, அதிகாரத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட வேண்டும்.

தற்போது அ.தி.மு.க. வின் உட்கட்சி விவகாரம் பெரிதாக நீடிக்கிறது. மேலும் ஆளும் கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் ஆட்சியின் நிர்வாகத்தில் பிரதிபலிக்கிறது. குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் நடைபெற வேண்டிய அன்றாட, அத்தியாவசியப் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. உதாரணத்திற்கு தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவும், டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதிலும் எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் முழுமையானதாக, போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பெருமளவு பாதிக்கப்படுவது கிராமப்புறத்தைச் சேர்ந்த சாதாரண ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள் தான் என்பதை அரசு உணர வேண்டும். அது மட்டுமல்ல அரசாங்க அதிகாரிகளுக்கு உரிய அதிகாரம் முறையாக, சரியாக பயன்படுத்தப்படாததால் அரசுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு மக்களுக்கான பணிகள் முடங்கிப்போயுள்ளது. இதனை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே இத்தகைய சூழலில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நினைத்தால் உட்கட்சியின் கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆளும் ஆட்சியும், கட்சியும் முன்வர வேண்டும். தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் மக்கள் நலன் காக்க வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்களும், ஆளும் கட்சியும் உணர்ந்து அதற்கேற்ப ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். அத்தகைய தருணத்தை காலம் தாழ்த்தாமல் ஏற்படுத்தினால் மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அவ்வாறு ஒன்றுபட்டால் ஆட்சி, அதிகாரம், நிர்வாகம், கட்சி என சுமூகமான சூழல் ஏற்படும் போது மக்கள் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த முடியும். அப்படி முழு கவனம் செலுத்தி, முன்னாள் முதல்வர் அவர்கள் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது ஆளும் ஆட்சியாளர்களின் கடமை. மேலும் தமிழக அரசு - நிலுவையில் உள்ள பல்வேறு திட்டப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு, விரைந்து முடித்து, மக்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்திட வேண்டும்.

முக்கியமாக தமிழக அரசு தமிழக மாணவர்கள் பிரச்சனையான நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கும் - இல்லையென்றால் 85 சதவீத உள் ஒதுக்கீடாவது பெறுவதற்கும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கும் மத்திய அரசை வலியுறுத்தி நல்ல முடிவு காண ஆட்சியும், கட்சியும் ஒன்றுபட்டு வழி வகுக்க வேண்டும்.

மேலும் டெல்லி சென்றிருக்கின்ற தமிழக முதல்வர் அவர்கள் பாரதப் பிரதமரைச் சந்தித்து - நீட் தேர்வுக்கு விலக்கு, விவசாயிகளின் கோரிக்கைகள், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஓஎன்ஜிசி யின் எண்ணெய் கிணறு, மீனவர்களுக்கு மீன்பிடித்தொழிலில் ஏற்படும் தொடர் பாதிப்பு போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு சுமூகத்தீர்வு ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் அழுத்தம் கொடுத்து பேச வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்துகிறது"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x