Published : 24 Aug 2017 09:49 AM
Last Updated : 24 Aug 2017 09:49 AM

தினகரனுடன் ஸ்டாலின் கைகோர்த்தால்.. புதிய பாதையை தேர்ந்தெடுப்பாரா அழகிரி?

அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக தினகரனோடு மு.க.ஸ்டாலின் கைகோர்த்து செயல்பட்டால் மு.க. அழகிரி தனக்கென தனிப்பாதையை தேர்ந்தெடுப்பார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிமுக எம்எல்ஏ.க்கள் 19 பேர், இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை என தமிழக ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் பல எம்எல்ஏ.க்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என தினகரன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுகவின் உதவியை தினகரன் தரப்பு மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் புதுச்சேரியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான ஏற்பாட்டை அங்குள்ள காங்கிரஸ் அரசிடமிருந்து திமுக மூலமே பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. காவிரி பிரச்சினைக்காக ஸ்டாலின் போராட்டம் அறிவித்தால், முதல் நபராக பங்கேற்பேன் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்தது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

இந்நிலையில், முக்கியமான அரசியல் நிகழ்வுகளின்போது திமுகவில் தனக்கென தனி பாணியை வகுத்து தீவிரமாக செயல்படும் அழகிரி, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மவுனமாக நடப்பு நிகழ்வுகளை கவனித்து வருகிறார்.

அதிமுக எம்எல்ஏக்கள் மூலமே அக்கட்சியின் ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சி, அழகிரியிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:

மதுரை மாநகர் மாவட்ட திமுக முன்னாள் அவைத்தலைவர் இசக்கிமுத்து கூறுகையில், ‘ ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தினகரனுடன் இணைந்து ஸ்டாலின் செயல்பட்டால், அதை உண்மையான திமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். முன்னாள் அமைச்சர் அழகிரி சிறிதும் ஏற்கமாட்டார். இத்தகைய நிலை ஏற்பட்டால், அப்போது அழகிரி என்ன முடிவு எடுப்பார் என தெரியவில்லை. தற்போது அழகிரி அமைதியாக இருக்கிறார் என்றார்.

மதுரை மாநகராட்சி திமுக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.ராஜ் கூறுகையில், ‘அழகிரி திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்திருந்தால், கூவத்தூரிலேயே அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டியிருப்பார். இதில், கோட்டை விட்டதால் தமிழக அரசு நிர்வாகத்துக்கும், மக்களுக்கும்தான் மிகுந்த பாதிப்பு. தினகரனிடம் கெஞ்சுவது, அவர்களின் தயவை எதிர்பார்ப்பது போன்றவற்றை அழகிரி ஒருபோதும் ஏற்க மாட்டார். தற்போது நடப்பதையெல்லாம் அழகிரி அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் இருப்பதால் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை நாங்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x