Last Updated : 18 Aug, 2017 11:01 AM

 

Published : 18 Aug 2017 11:01 AM
Last Updated : 18 Aug 2017 11:01 AM

குழப்பத்தில் அதிமுக.. தடுமாறும் ஆட்சி நிர்வாகம்: அணிகள் இணைப்பில் அதீத ஆர்வம் ஏன்? - பிரதமருக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

தமிழக ஆளும்கட்சியான அதிமுகவில் அணிகள் குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் கே.பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருவது மேலும் குழப்பத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அணிகள் இணைப்பில் பிரதமர் அதீத ஆர்வம் காட்டுவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் தொடங்கின. இதற்காக இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அது தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மாறி மாறி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிவருகின்றனர். கடந்த 2 மாதங்களில் 4 முறை இருவரும் மோடியை சந்தித்துள்ளனர்.

தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கிலேயே பிரதமரை சந்திப்பதாக இருவரும் கூறுகின்றனர்.

தமிழகத்தில் ஆளும்கட்சியான அதிமுகவில் அணிகள் குழப்பம் பல மாதங்களாக நீடித்துவருவது மற்றும் அரசு நிர்வாகத்தில் இது எதிரொலித்துவரும் சூழலில், முக்கிய அணித் தலைவர்களான கே.பழனிசாமி, ஓபிஎஸ் ஆகிய இருவரிடமும் பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருவது மேலும் குழப்பம், சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக ‘தி இந்து’விடம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியதாவது:

ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் :

ஜெயலலிதா மறைந்த அடுத்த சில நாட்களிலேயே அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, அதன்மூலம் தமிழகத்தில் காலூன்ற பாஜக திட்டம் தீட்டி வருகிறது. சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை மூலம் அதிமுக அமைச்சர்களை மிரட்டி மத்திய பாஜக அரசு பணியவைத்துள்ளது.

இதனால் அதிமுகவின் 3 அணிகளும் தங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும், போட்டி போட்டு பாஜகவை ஆதரிக்கின்றன. இந்நிலையில் கே.பழனிசாமி, ஓபிஎஸ் ஆகிய இருவரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்துப் பேசி, பகிரங்கமாக பஞ்சாயத்து செய்வது நாடு இதுவரை கண்டிராத நிகழ்வு. நாட்டு நலனுக்காக செயல்பட வேண்டிய பிரதமர், பாஜகவின் தனிப்பட்ட நலனுக்காக இவ்வாறு செய்வது கண்டனத்துக்கு உரியது. இது அதிமுகவின் எதிர்காலத்துக்கும், தமிழக மக்களின் நலன்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

திருச்சி சிவா, மாநிலங்களவை திமுக உறுப்பினர்:

ஜெயலலிதா மறைந்த பிறகு கடந்த 8 மாதங்களில் தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய, கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. இதற்கெல்லாம் தீர்வு காணவேண்டிய அதிமுக அரசு, உட்கட்சி பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே காலம் கடத்திவருகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் நீட் தேர்வு நடப்பதற்கு முன்பே பிரதமரை சந்தித்து வலியுறுத்தினோம்.

அதிமுக அரசோ, நீட் தேர்வு நடந்து முடிந்த பிறகு நடையாய் நடக்கிறது. அதிமுக அணிகள் இணைகிறதா, பிரிகிறதா என்பது முக்கியம் அல்ல. தமிழக மக்கள் வாழ வேண்டும், அதற்கு வழிகாண வேண்டும் என்பதே முக்கியம்.

இல.கணேசன், எம்.பி., பாஜக மூத்த தலைவர்:
 

18CHRGN_ILA_GANESAN இல.கணேசன்

கே.பழனிசாமி தமிழக முதல்வர். ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர். அந்த அடிப்படையில்தான் இருவரும் பிரதமரை சந்திக்கின்றனர். தமிழகத்துக்கான திட்டங்கள், பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் பிரதமர் பேசுகிறார். இதில் என்ன தவறு? அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் பிரதமரை சந்திக்கலாம்.

அதுதான் நடக்கிறது. அதிமுக இரு அணிகளின் ஒற்றுமை பற்றி பிரதமர் பேசியதாகவே வைத்துக் கொண்டாலும், அதற்காக ‘பஞ்சாயத்து செய்கிறார்’ என்றெல்லாம் பண்பற்ற வார்த்தைகளால் பிரதமரை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.

இது அவர்களது தரத்தையே காட்டுகிறது. தவிர, ஒற்றுமை பற்றி பேசினால் இவர்கள் ஏன் அச்சப்பட வேண்டும்?

18CHRGN_NALLAKANNU ஆர்.நல்லகண்ணு rightஆர்.நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்:

மக்களை பிளவுபடுத்தி, கட்சியை பலப்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதை பாஜக வழக்கமாகக் கொண்டுள்ளது. ஜெயலலிதா மறைந்த உடனேயே, அப்போதைய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அதிமுகவுக்கு வழிகாட்டிபோல செயல்பட்டார். பாஜகவின் கொள்கைகளை நேரடியாக சொன்னால் தமிழகத்தில் எடுபடாது என்பதால், அதிமுகவைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக திட்டமிடுகிறது.

 அதிமுகவினரும் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக, பாஜக சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகின்றனர். இந்த நிலை நீடித்தால், தமிழகத்துக்கு பேரிழப்பு ஏற்படும். மாநிலக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் பிரதமரே நேரடியாக தலையிடுவது சரியல்ல. இது அதிமுகவுக்கும், தமிழகத்துக்கும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x