Last Updated : 28 Aug, 2017 09:07 AM

 

Published : 28 Aug 2017 09:07 AM
Last Updated : 28 Aug 2017 09:07 AM

போலி இருப்பிட சான்று கொடுத்து விண்ணப்பித்ததாக புகார்: கேரளாவை சேர்ந்த 9 மாணவர்களில் 4 பேருக்கு எம்பிபிஎஸ் இடம் ஒதுக்கீடு - வெளிமாநில தரவரிசை பட்டியலை ஒப்பிட்டு போலீஸார் தீவிர விசாரணை

போலியான இருப்பிடச் சான்று கொடுத்து விண்ணப்பித்ததாக புகார் அளிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்களில் 4 பேருக்கு கலந்தாய்வில் எம்பிபிஎஸ் இடம் கிடைத்தது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல் என தனித்தனியாக தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கேரளா, ஆந்திரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் படித்த மாணவர்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர்.

தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் அதிக அளவில் இடம்பெற்றிருப்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வெளி மாநில மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாது. இவர்கள் வெளி மாநில மாணவர்கள் இல்லை. வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள். மாணவர்களின் குடும்பங்கள் வேலை நிமித்தமாக பணியிட மாறுதல் உள்ளிட்ட காரணங்களால், வெளி மாநிலங்களில் வசிப்பார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் இருப்பிடச் சான்று பெற்று இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தாலும், தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. கடந்த ஆண்டும் வெளி மாநிலங்களில் படித்த தமிழக மாணவர்கள் இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடப்பதால், அந்த மாணவர்கள் அதிக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கடுமையான நடவடிக்கை

பல ஆண்டுகளாக வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களின் பிள்ளைகள், அவர்கள் வசிக்கும் மாநிலங்களில் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்திலும் விண்ணப்பிக்கலாம். ஆனால், இரண்டு மாநிலத்திலும் விண்ணப்பிப்பது தவறு. அப்படி அவர்கள் இரண்டு மாநிலத்தில் விண்ணப்பித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

காவல் ஆணையரிடம் புகார்

இதனைத் தொடர்ந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இதற்கிடையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள், அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளிலும், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் போலியான இருப்பிடச் சான்று பெற்று தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். அந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 24-ம் தேதி விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் ஒய்.அம்ஜத் அலி புகார் கொடுத்திருந்தார்.

போலீஸார் தீவிர விசாரணை

இந்த புகார் குறித்து உடனடி விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினர். தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், இப்படி ஒரு புகார் வந்தது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனிப்படை போலீஸார் தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவக் கல்வி இயக்ககத்தில் (டிஎம்இ) இருந்து பெற்றனர். அதேபோல கேரளா, டெல்லி, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பலவேறு மாநிலங்களில் இருந்து தர வரிசைப் பட்டியல்களை வாங்கினர். தமிழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்கள், மற்ற மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனரா என்று ஒப்பிட்டு விசாரணை நடந்து வருகிறது.

4 மாணவர்கள் மீது நடவடிக்கை

போலியான இருப்பிடச் சான்று கொடுத்து, தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்ததாக 9 கேரள மாணவர்கள் மீது புகார் அளித்தது பற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அந்த புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை கொடுக்கிறோம். புகார் தெரிவிக்கப்பட்ட 9 கேரள மாணவர்களில் 8 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

அதில் 3 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடமும், ஒரு மாணவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடமும் பெற்றுள்ளனர். ஒரு மாணவர் கலந்தாய்வுக்கு வரவில்லை. போலீஸ் விசாரணையில் போலியான இருப்பிடச் சான்று கொடுத்தது தெரியவந்தால், கலந்தாய்வில் கலந்துகொண்டு இடம்பிடித்த 4 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களிடம் உறுதிமொழி

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களிடம் ‘வேறு மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கவில்லை. இருப்பிடச் சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் உண்மை’ என்ற உறுதிமொழியைப் பெற்று, அனைத்து ஆவணங்களை சரிபார்த்த பின்னரே மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது.

போலியான இருப்பிடச் சான்று அல்லது தவறான முறையில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களிடமும், பெற்றோரிடமும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x