

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால், வறட்சியின் பிடியில் இருந்து முதுமலை பசுமைக்கு திரும்பியுள்ளது. மழையால் வனங்களில் பசுமை திரும்புவதுடன், நீர் நிலைகளில் நீர் வரத்தும் அதிகரித்து வருகிறது. இதன்மூலமாக, வனங்களில் குட்டை மற்றும் குளங்கள் நிரம்பி, விலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகி வருகிறது.
கோடை காலத்தில் இடம்பெயர்ந்த வன விலங்குகள், மீண்டும் தமிழக வனப்பகுதிகளுக்கு திரும்பி வருகின்றன. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் புல் மற்றும் தாவரங்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால், விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ஆர்.ரெட்டி கூறும்போது, “முதுமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 150 குட்டை மற்றும் குளங்கள், ரூ.37 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டன. இந்த ஆண்டு, கோடை காலத்தில் கடும் வறட்சி நிலவியதால், வன விலங்குகளின் தேவைக்காக டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு சென்று ஊற்றப்பட்டது.
மேலும், வறட்சியைப் பயன்படுத்தி குட்டைகள் மற்றும் குளங்கள் தூர்வாரப்பட்டன. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், காப்பகத்தில் உள்ள குட்டை மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன” என்றார்.