Published : 18 Aug 2017 09:12 AM
Last Updated : 18 Aug 2017 09:12 AM

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

நிர்வாக அலுவலர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என முதல்வர் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், நில அளவை அலுவலர்கள் சங்கங்கள் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பேசியதாவது:

நாட்டின் அடிப்படை நிர்வாகம் கிராமங்களில் இருந்துதான் தொடங்குகிறது. கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளர்ச்சி அடையும். 30 ஆண்டுகளுக்கு முன்பு பலவிதமான கிராம நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள கர்ணம், முன்சீப் என்ற பெயரில் கிராம அலுவலர்களும், உதவியாளர்களும் பகுதி நேரமாக பணியாற்றி வந்தனர்.

மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் சேவையை மேம்படுத்த கிராம நிர்வாக அமைப்பை எம்ஜிஆர் மாற்றி அமைத்தார். கர்ணம், முன்சீப் பதவிகளுக்கு மாற்றாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, படித்த இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். கிராம நிர்வாகமும் நவீனப்படுத்தப்பட்டது.

அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதனுக்கும் சென்று சேருவதற்கு கிராம நிர்வாக அலுவலர்களே காரணம். வரி வசூல், பல்வேறு விதமான சான்றிதழ்கள் வழங்க பரிந்துரை செய்தல் என அனைத்து அதிகாரங்களும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மட்டுமே உள்ளது. சாமானியராக இருந்தாலும், செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்துதான் சான்றிதழ் பெற முடியும்.

கிராமங்களில் இருக்கும் பலமான நிர்வாக அமைப்புதான் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக இயங்க உதவுகிறது. கிராம உதவியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களில் 20 சதவீதத்தினர் கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு பெறலாம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஓய்வூதியம் உயர்வு, குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

இந்தியாவின் முன்னேற்றம் என்பது கிராமங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. கிராம நிர்வாகத்தின் முதுகெலும்பான நிர்வாக நிர்வாக அலுவலர், உதவியாளர்கள், நில அளவையாளர்கள் அனைவரும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பராமரிப்புச் செலவுத் தொகை ரூ. 2,500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். இணையவழி பட்டா வழங்கும் திட்டத்துக்காக நியமிக்கப்பட்ட 254 கணினி பதிவேற்றுநர்களின் பணிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும். வருவாய்த் துறையின் இணையதள சேவையை மேம்படுத்த எல்காட் நிறுவனம் மூலம் 3ஜி, 4ஜி இணையதள வசதி தேவைக்கேற்ப அனைத்து நிர்வாக அலுவலர்களுக்கும் வழங்கப்படும்.

நில அளவை பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள 546 புல உதவியாளர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கூடுமானவரை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சொந்த வட்டம், உள்வட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

விழாவில் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘‘அரசின் அனைத்து துறைகளுக்கும் தாய்த் துறையாக வருவாய்த் துறை விளங்குகிறது. இந்தத் துறையை சீரமைத்து முறைப்படுத்தியவர் எம்ஜிஆர். அதை நவீனப்படுத்தியவர் ஜெயலலிதா. வருவாய்த் துறை சிறப்பாக செயல்பட முதல்வர் அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்’’ என்றார்.

விழாவில் அமைச்சர்கள், துறை செயலாளர் சந்திரமோகன், வருவாய் நிர்வாக ஆணையர் கோ.சத்யகோபால், நில நிர்வாக ஆணையர் மோகன் பியாரே, நகர்ப்புற நில உச்சவரம்பு, நகர்ப்புற நில வரித்துறை ஆணையர் பி.சிவசங்கரன், நில சீர்திருத்தத் துறை ஆணையர் ஜெயஸ்ரீ ரகுநந்தன், நில அளவை மற்றும் நிலவரி திட்டத் துறை இயக்குநர் ம.ரவிகுமார், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க முதன்மை பொதுச்செயலாளர் கி.வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் மு.ராஜேந்திரன், வருவாய் கிராம ஊழியர் சங்க கவுரவத் தலைவர் எம்.மாரியப்பன், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க மாநிலத் தலைவர் ஆர்.காண்டீபன், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநிலத் தலைவர் ஆர்.காயம்பூ, நில அளவை புல உதவியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பி.பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x