Published : 24 Aug 2017 05:35 PM
Last Updated : 24 Aug 2017 05:35 PM

அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியினர் மீது நடவடிக்கை எடுக்காத கொறடா எங்களை எப்படி நீக்க முடியும்? - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ கேள்வி

அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியினர் மீது நடவடிக்கை எடுக்காத கொறடா எங்களை எப்படி நீக்க முடியும் என்று தினகரன் ஆதரவாளர் பழனியப்பன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

19 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளது குறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பனிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர் பதிலளித்துப் பேசியதாவது:

19 பேரை தகுதி நீக்கம் செய்ய கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரைத்துள்ளாரே?

அப்படி செய்வதற்கு வாய்ப்பு இல்லை. ஏற்கெனவே அம்மா அணி , புரட்சித்தலைவி அம்மா அணி என்று இரண்டு அணிகள் இருந்தன. ஓபிஎஸ் அணியினர் 11 பேர் சட்டமன்றத்தில் எதிர்த்து ஓட்டு போட்டுள்ளனர். அவர்களே இதுவரை ஒன்றாக சேர்ந்துவிட்டோம் என்று கடிதம் கொடுக்கவில்லையே.

எதிர்த்து வாக்களித்த அந்த 11 பேர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே. அன்று கொறடாவுக்கு அந்த தகுதி இருந்திருந்தால் அன்று நடவடிக்கை எடுத்திருக்கலாமே. அவர் அங்கீகரிக்கப்பட்ட கொறடாவாக இல்லாதபோது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். தகுதி நீக்கம் செய்ய அவருக்கு உரிமை இல்லை.

அவரை எப்படி அங்கீகாரம் இல்லாத கொறடா என்று கூறுகிறீர்கள்?

ஆமாம். அப்படி இருந்திருந்தா அந்த உரிமையை பயன்படுத்தி அவர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே. அவர்கள் எதிர்த்து ஓட்டே போட்டார்களே. நாங்கள் அப்படி எதிர்த்து ஓட்டு போடவில்லையே. நம்பிக்கை இல்லாத தீர்மானம் வந்து எதிர்த்து வாக்களிக்கும் சூழ்நிலை ஏற்படவில்லையே.

முதல்வரை மாற்றத்தானே கேட்டோம் அரசுக்கு எதிராக ஒன்றும் செயல்படவில்லையே. எதிர்ப்பா ஓட்டு ஒன்றும் போடவில்லையே. ஒரு பரிந்துரை மட்டும்தானே கொடுத்துள்ளோம்.

இதற்கு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தீர்ப்பு உள்ளதே. கர்நாடகாவில் முதல்வருக்கு எதிராக மனு கொடுத்த எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது. அதையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுத்தானே கொடுத்துள்ளோம்.

கர்நாடகாவுக்கு அது பொருந்தும் போது தமிழ்நாட்டுக்கும் இது பொருந்தும் அல்லவா? ஆகவே உச்ச நீதிமன்றத்தை மீறி அவர்கள் நடக்கமுடியுமா? கொறடா எங்களுக்கு எந்த உத்தரவும் போட்டு அதை நாங்கள் மீறவில்லை ஆகவே நடவடிக்கை எதுவும் இதில் எடுக்க முடியாது.

இவ்வாறு பழனியப்பன் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x