Published : 28 Apr 2017 01:09 PM
Last Updated : 28 Apr 2017 01:09 PM

விக்கிப்பீடியா வரை நீளும் அதிமுகவின் இரு அணிகள் மோதல்

அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே நிலவிவரும் கருத்து மோதல் அக்கட்சியின் அதிகாரபூர்வ இணையதளம், ஃபேஸ்புக், ட்விட்டர் தாண்டி விக்கிபீடியா வரை நீண்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டது. சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி இரு அணிகளாக கட்சி உடைந்தது.

அதன்பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானது, சின்னத்துக்கு தினகரன் லஞ்சம் தர முயன்றது என கட்சிக்குள் சலசலப்புகள் நாளுக்குநாள் உருவாகின.

இத்தகைய சூழலில், கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் டிடிவி.தினகரனையும் அவர் சார்ந்த குடும்பத்தாரையும் ஒதுக்கிவைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர். தற்போது இருதரப்பும் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகள் நடந்துவருகிறது.

முதல்வர் பதவி யாருக்கு, பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்ற போட்டாபோட்டி நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இதுவரை அதிமுகவின் அதிகாரபூர்வ இணையதளம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் நடந்துவந்த அணி மோதல் தற்போது அதையும் தாண்டி விக்கிபீடியா வரை நீண்டுள்ளது.

வியாழக்கிழமை அதிமுகவின் விக்கிப்பீடியா பக்கத்தில் அடுத்தடுத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. அதிமுக அம்மா அணியினரும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினரும் மாறிமாறி விக்கிப்பீடியா பக்கத்தை எடிட் செய்து கொண்டிருந்தனர்.

அதாவது அதிமுக விக்கிப்பீடியா பக்கத்தில் ஒருமுறை ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொதுச்செயலாளர் எனக் காட்டப்பட்டால் மற்றொரு முறை எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளர் எனக் காட்டப்பட்டது. பின்னர், கட்சி பொதுச்செயலாளர் என வி.கே.சசிகலாவின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஒரு சில மணி நேரத்திலேயே அதுவும் மாற்றப்பட்டு கட்சியின் பொதுச்செயலாளர் என ஜெ.ஜெயலலிதாவின் பெயர் இடம்பெற்றது. இரவு 9 மணி வரை மாறி மாறி பொதுச்செயலாளர் பதவி மாற்றப்பட்டுவந்த நிலையில் அந்தப் பக்கம் மேலும் எடிட் செய்ய முடியாதவாறு முடக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x