Published : 21 Aug 2017 12:09 PM
Last Updated : 21 Aug 2017 12:09 PM

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி வளாகத்தில் இன்று சிறப்பு சந்தை திறப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 21) சிறப்புச் சந்தை திறக்கப்படுகிறது.

கோயம்பேடு சந்தை நிர்வாகம் சார்பில், ஆண்டுதோறும், பொங்கல், ஆயுதபூஜை ஆகிய பண்டிகைகளின்போது சிறப்புச் சந்தைகள் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல, கடந்த இரு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் சிறப்புச் சந்தை திறக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வளாகத்தில் மலர் அங்காடி அருகில் இன்று சிறப்புச் சந்தை திறக்கப்படுகிறது. சிறப்புச் சந்தை 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்புச் சந்தையில் பண்டிகை பொருட்களான பொரி, கரும்பு, பூசணிக்காய், மஞ்சள் கொத்து, மாவிலைத் தோரணங்கள், பழ வகைகள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

சிறப்புச் சந்தைக்கு வரும் வாகனங்களிடமிருந்து நுழைவுக் கட்டணம், பொருட்களை வியாபாரம் செய்வதற்கான கட்டணம் ஆகியவற்றை வசூலிக்கும் பணிக்கான ஏலம் சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டு, தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயம் பேடு சந்தை நிர்வாகக் குழுவுக்கு ரூ.2 லட்சத்து 21 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது.

24 மணி நேர அனுமதிச் சீட்டு

இதுதொடர்பாக கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, பண்டிகைக்குத் தேவையான பொருட்களை விலை மலிவாக, ஒரே இடத்தில் வாங்கிச் செல்லும் வகையில் இந்த சிறப்புச் சந்தை திறக்கப்படுகிறது. பண்டிகை காலப் பொருட்களை விற்பனை செய்வோர் ஏலதாரரிடம் தினந்தோறும் அனுமதிச் சீட்டு பெற வேண்டும்.

அனுமதிச் சீட்டு 24 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லத்தக்கது. அனுமதிச் சீட்டு இன்றி வியாபாரம் செய்பவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x