

திருமண தகவல் மையத்தின் இணையதளம் மூலம் தொடர்பு கொண்ட பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் திருமணம் செய்வதாகக் கூறி ஆசிரியையை ஏமாற்றி ரூ.1.20 லட்சம் மோசடி செய்தார். போலீஸார் அவரை கைது செய்தனர்.
வண்டலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் திருமண தகவல் மைய இணையதளத்தில் மணமகன் தேவை என்று கடந்த ஆண்டு விளம்பரம் கொடுத்தார். இதைப் பார்த்த பெங்களூர் விஜயநகரைச் சேர்ந்த சுதிப்கௌடா என்கிற செந்தில் (40), அதில் இருந்த செல்போன் எண்ணில் ஆசிரியையை தொடர்புகொண்டு பேசி திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பலமுறை இவர்கள் போனில் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் வண்டலூரில் நேரில் சந்தித்தனர். அப்போது, தான் டிராவல்ஸ் நடத்தி வருவதாகவும், சினிமா படம் எடுத்து வருவதாகவும் ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். பின்னர் தனக்கு அவசரமாக பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆசிரியையும், செந்திலின் வங்கிக் கணக்கில் இரு முறை பணம் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், செந்திலின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் ஆசிரியையை தொடர்புகொள்ளவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியை ஓட்டேரி காவல்நிலையத்தில் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி புகார் தெரிவித்துள்ளார். அப்புகாரில் தன்னை திருவிடந்தையில் உள்ள கோயிலில் செந்தில் திருமணம் செய்துக்கொண்டதாகவும் தன்னிடம் இருந்து ரூ.1.20 லட்சம் பணம் பெற்று ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீஸார் பெங்களூர் சென்று அங்குள்ள விஜயநகர் போலீஸாருடன் இணைந்து விசாரித்தபோது செந்தில் வீட்டை காலி செய்திருந் ததும், அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஆண் குழந்தை இருந்ததும் தெரியவந்தது. அங்கி ருந்த தபால் பெட்டியில் செந்திலின் ஆதார் அட்டை இருந்தது அதை எடுத்துக்கொண்ட விஜயநகர் போலீஸார், ஆதார் அட்டையைத் தேடி செந்தில் வந்தால் காவல்நிலையம் வரும்படி வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்பு ஆதார் அட்டை வாங்க விஜயநகர் காவல்நிலையம் வந்த செந்திலை போலீஸார் பிடித்து, ஓட்டேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், தான் ஆசிரியையை திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றும், நெருக்க மாக ஸ்டுடியோவில் போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டோம் என்றும் வாக்குமூலத்தில் தெரிவித் துள்ளார். இதைத் தொடர்ந்து இவர் மீது நம்பிக்கை மோசடி செய்து ரூ.1.20 லட்சம் ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், ஞாயிற்றுக் கிழமை செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி செந்திலை போலீஸார் சிறையில் அடைத்தனர்.