Published : 27 Aug 2017 01:55 PM
Last Updated : 27 Aug 2017 01:55 PM

சட்டப்பேரவை உரிமை குழு கூடுவது குறித்து எனக்குத் தகவல் இல்லை: ஸ்டாலின்

குட்கா விவகாரம் பற்றி ஆலோசிப்பதற்காக நாளை உரிமை குழு கூடுவது குறித்து தனக்கு எவ்வித தகவலும் வரவில்லை என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, போதை வஸ்துகள் தாராளமாக கிடைக்கின்றன. ஆனால், அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் அவையில் குற்றஞ்சாட்டினர். அப்போது திமுக எம்.எல்.ஏ.,க்கள் சிலர் திடீரென குட்கா பொட்டலங்களை அவையில் எடுத்துக் காட்டினர்.

தி.மு.க. உறுப்பினர்களின் இந்தச் செயலைக் கண்டித்த சபாநாயகர் தனபால், 20 தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு உரிமைக்குழுவுக்கு பரிந்துரை செய்தார். அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் அணியினர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் நாளை சட்டபேரவை உரிமை குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று திருவாரூரில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் இல்ல திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், உரிமை குழு கூட்டத்துக்கு வர தனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை என்றார். அவர் மேலும் பேசும்போது, "நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குட்கா விவகாரத்தினை முதல்வர் பழனிசாமி கையில் எடுத்துள்ளார். மத்திய அரசிடம் அடிபணியும் அரசாக தமிழக அரசு உள்ளது. ஒரு மாதத்துக்குள் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வந்தே தீரும். அ.தி.மு.க. ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x