

புதுச்சேரி கடற்கரையில் கழிவுநீர் குப்பைகள் அதிகளவில் சேர்ந்துள் ளதால், துறைமுக தூர்வாரும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
புதுச்சேரி கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுத்து, செயற்கை மணற்பரப்பை உருவாக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம், தேசிய பெருங்கடல் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து, 25 கோடி ரூபாயில், நவீன தொழில் நுட்பத்தில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.
இதன்படி, புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரத்தில் சேர்ந்துள்ள மணலை கொண்டு வந்து செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்படுகிறது.
தூர்வாருவதற்காக விசாகப் பட்டினத்தில் உள்ள மத்திய அரசின் டிரஜ்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்துடன் புதுச்சேரி துறைமுகம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்தது. இப்பணி, ரூ.14.89 கோடி செலவில், கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.
இந்த நிலையில், தூர்வாரும் இயந்திரத்தில் (டிரஜ்ஜர்) பழுது ஏற்பட்டதால், தூர் வாரும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதனால், ரூ.2.9 கோடி செலவில், காரைக்கால் துறைமுகத்தின் காவேரி டிரஜ்ஜிங் கப்பல் கொண்டு வரப்பட்டு தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, துறைமுக முகத்துவாரத்தில் தூர்வாரப்படும் மணலைக் கொண்டு, புதுவை கடற்கரையில் கருங்கற்கள் கொட் டப்பட்டுள்ள இடத்தில், செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக டிரஜ்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் மூலம் தேங்காய்த்திட்டு துறைமுக முகத் துவாரத்தில் இருந்து சீகல்ஸ் உணவகம் வரை ராட்சத குழாய்கள் புதைக்கப்பட்டு, இந்த செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பழைய துறை முகத்தின் வடக்குப் பகுதியில் மணலுக்கு பதிலாக குப்பைகள், கழிவுப் பொருள்கள் கொட்டப் பட்டு வருகின்றன. மொத்தம் 3 லட்சம் கன மீட்டர் மணலை வாரி பழைய துறைமுக பாலம் அருகே கொட்ட வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் அம்சமாகும். ஆனால் இதன்படி நடக்கவில்லை. 1 லட்சம் கன மீட்டர் அளவுக்கு மணலை தூர்வாரப்பட்ட நிலையில் வெறும் 65 ஆயிரம் கனமீட்டர் மணல் மட்டுமே கடற்கரையில் கொட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நல்லாட் சிக்கான அமைப்பின் நிர்வாகி புரோபிர் பானர்ஜி கூறியது:
துறைமுகத்தை தூர் வாரும் மணலை டிசிஐ நிறுவனம் துறைமுகம் அருகே உள்ள காலி இடத்தில் கொட்டி வந்தது.
இதனால் கடற்கரையை சீரமைக்கும் பணி தொய்வடைந்தது. பின்னர் புதுவை அரசுடன் உள்ள ஒப்பந்தத்தின்படி கடற்கரையில் இருந்து சற்று தூரத்தில் 3 அல்லது 4 மீ ஆழத்துக்கு மணலை கொட்டியுள்ளனர்.
இது கரையை அடைந்து மணல்பரப்பாக மாற சில காலம் பிடிக்கும். தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிக்கையின்படி துறைமுக முகத்து வாரத்தில் இருந்து 97697 கன மீட்டர் மணலே தூர்வாரப்பட்டுள்ளது. இதில் 34.300 கன மீட்டர் மணல் கரையில் கொடப்படாமல் துறைமுகம் அருகே உள்ள இடத்தில் கொட்டப் பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது. தலைமைச் செயலகம் அருகே சில பகுதிகளில் மணல் பரப்பு உருவாகி இருந்தாலும், இது முழுமையான கடற்கரையாக மாற போதுமானதில்லை என்றார் பானர்ஜி.
டிசிஐ நிறுவன தூர்வாரும் இயந்திரம் மணலுக்கு பதிலாக உப்பனாறு கால்வாய், பெரிய கால்வாயில் இருந்து வரும் குப்பைக்கழிவுகள், சேறு போன்றவற்றைய சேகரித்து குழாய் மூலம் கரையில் கொட்டியது. இதனால் மணல் பரப்பை ஏற்படுத்தும் திட்டம் சிக்கல் அடைந்துள்ளது.
கரைகளில் குப்பைகள் கழிவுகள் சேருவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் தூர்வாருதல், கொட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது என துறைமுக தரப்பில் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று கடற்கரையில் மணல் பரப்பு அருகே கழிவு நீர் கொட்டிய இடத்தில் குப்பைகள், கழிவுகள் தேங்கியிருந்தன. அவற்றை சாக்குகளில் சேகரித்து அகற்றும்பணி தொடங் கியுள்ளது. பணியா ளர்கள் கழிவுகளை அகற்றும் பணியை தொடங்கியுள்ளனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் புதுவை துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து கையாளப்படும் நிலையில் துறைமுக நிர்வாகம் இப்பிரச்சினைக்கு உடனே தீர்வு காண்பதில் சிக்கல் நிலவுகிறது. சரக்கு போக்குவரத்து தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
குப்பைக்கான காரணமென்ன?
கழிவுநீர் கால்வாய்க்களில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளை போடுகின்றனர். அக்கால்வாய் நீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே கடலில் கலப்பதும் ஓர் காரணம் என்று சுற்றுச்சூழல் தரப்பினர் குறிப்பிடுகின்றனர். கடல் மாசடைவதை பற்றியும், கடல் உயிரினங்கள் பாதிப்பு தொடர்பாகவும் உரிய நடவடிக்கை அவசியம் எனவும் வலியுறுத்துகின்றனர்.
கழிவு, குப்பைகள்: ஆளுநர் கருத்து ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் கூறியதாவது: அதிக மதிப்பீட்டில் நடைபெறும் திட்டங்களை கண்காணிப்பது அவசியம். அனைத்து துறைகள் ஒருங்கிணைத்து நேர்மையாக திட்டத்தை மேற்கொள்வது அவசியம். கழிவுகள், குப்பைகள் சேருவதை தடுக்க பல தீர்வுகள் இருந்தாலும் அவை செயல்படுத்தவில்லை.அதிகாரிகள் எந்த ஒரு திட்டத்தையும் அச்சமின்றி, செயல்படுத்த வேண்டும். புதுச்சேரி மற்றும் அதன் கடற்கரையை காக்க வேண்டும். தூர் வாரும் பணியை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்காணிக்க வேண்டும். எத்திட்டத்திலும் மக்கள் வெளிப்படை தன்மை தேவை என்பதை வலியுறுத்துவதுடன் ஊழலை வெளிப்படுத்துபவர்களாகவும் மாறுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார். |