Published : 30 Aug 2017 09:09 AM
Last Updated : 30 Aug 2017 09:09 AM

செப்டம்பர் 7 முதல் திட்டமிட்டபடி ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்

செப்டம்பர் 7-ம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவது, தொகுப்பூதிய, மதிப்பூதிய முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.

பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காவிட்டால் செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது. இந்நிலையில், தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்த ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில்,எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:

தமிழக அரசு அழைத்து பேசாத நிலையில், திட்டமிட்டபடி செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும், செப்டம்பர் 7-ம் தேதி தாலுகா அளவில் மறியல் போராட்டம், 8-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டங்கள் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, செப்டம்பர் 10-ம் தேதி மீண்டும் உயர்மட்டக் குழு கூடி, அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x