அதிமுக இணைப்பு : பேச்சுவார்த்தைக்கு குழுக்கள், ஓரிரு நாளில் சந்திக்க திட்டம்

அதிமுக இணைப்பு : பேச்சுவார்த்தைக்கு குழுக்கள், ஓரிரு நாளில் சந்திக்க திட்டம்
Updated on
2 min read

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பேச்சு நடத்த இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஓரிரு நாளில் பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் 2 அணிகளாக பிளவு ஏற்பட்டது. கட்சியையும், ஆட்சியையும் தொடர்ந்து நடத்துவதற்கு, பிரிந்த அணிகள் மீண்டும் இணைவது அவசியம் என்பதை உணர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை, கட்சியில் இருந்து சசிகலா, தினகரன் குடும்பத்தினரை முழுவதுமாக நீக்குவது என்பதுதான் ஓபிஎஸ் தரப்பின் பிரதான கோரிக்கை. இதை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்ப தாக அவர்கள் கூறுகின்றனர். சில அமைச்சர்கள் இதை விமர்சித்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு இரு அணி களும் இணைவதற்கான அடுத்தகட்ட முயற்சிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த நிலையில், வழக்குகளில் சிக்கியுள்ள தினகரனை வெளியேற்ற சசிகலா குடும்பத்தினர் நாடகம் நடத்துவதாக ஓபிஎஸ் அணியின் கே.பி.முனுசாமி நேற்று முன்தினம் குற்றம்சாட்டினார். அதற்கு பதில் அளித்த எடப்பாடி அணியின் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., ‘‘எந்த நிபந்தனையும் இல்லாமல் திறந்த மனதுடன் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

இந்த நிலையில், சென்னை ராயப் பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று காலை ஆலோச னைக் கூட்டம் நடந்தது. இதில் மூத்த அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், பி.பெஞ்சமின் மற்றும் வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர். ஓபிஎஸ் தரப்பு நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த சில அமைச்சர்கள், முதல்வர் பதவி தொடர்பாகவும் பேசி யுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, முதலில் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது, அதன்பிறகு, ஓபிஎஸ் அணியுடன் பேசி முடிவெடுப்பது என்று தீர் மானிக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் வேலுமணி கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தொடர, முதல்வருடன் ஆலோசனை நடத்தினோம். இந்த கட்சிக் காக ஜெயலலிதா கடினமாக உழைத்துள்ளார். எனவே, கட்சி, ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். அதிமுக தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்காக இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடத்த வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள் ளது.

கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அவர் தினமும் வந்து நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுவார். அமைச்சர்கள் தங்களது துறைசார்ந்த பணிகளை கவனிப்பார்கள். ஓபிஎஸ் தரப்பினர் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து பேச்சு நடத்தலாம். எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்த இந்த இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியபோது, ‘‘இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நல்லபடியாக அமைய வேண்டும். அதற்கு குந்தகம் ஏற்படாமல் இருக்க, ஊடகங்களில் ஆளாளுக்கு பேசவேண்டாம் என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை

இதற்கிடையில், சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் 2-வது நாளாக நேற்றும் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோ சனை நடத்தினார். 4 மணி நேரத்துக்கு மேலாக இக்கூட்டம் நடந்தது.

சசிகலா குடும்பத்தினர் அனை வரையும் கட்சியில் இருந்து நீக்காத வரை, பேச்சுவார்த்தைக்கு போகக்கூடாது என பலர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆலோசனையின்போது, எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோருடன் ஓபிஎஸ் அணியினர் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

ஆலோசனைக்குப் பிறகு, செய்தி யாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ‘‘தொண்டர்கள், தமிழக மக்களின் நலன் கருதி, அவர்களுடன் பேச்சு நடத்த எங்கள் அணியிலும் குழு அமைக்கப்படுகிறது’’ என்றார். கே.பி.முனுசாமி தலைமையில் சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், க.பாண்டியராஜன், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கொண்ட 7 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி யதால் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் நேற்று இரு தரப்பிலும் முக்கியத் தலைவர்கள் தவிர மற்றவர்கள் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்தனர். இரு அணிகளும் நிதானத்தை கடைபிடிப்பதால் ஓரிரு நாளில் பேச்சுவார்த்தை தொடங்கும் என இரு அணி வட்டாரங்களும் தெரிவிக் கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in