Last Updated : 26 Aug, 2017 09:44 AM

 

Published : 26 Aug 2017 09:44 AM
Last Updated : 26 Aug 2017 09:44 AM

ஐம்பதிலும் படிப்பு வரும்! - சாதிக்கும் பானுமதி மோகன்

டிப்பில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவிகளில்கூட பெரும்பகுதியினர் கல்லூரி படிப்பு, வேலை, திருமணம், குழந்தை என சம்பிரதாய வாழ்க்கை சடங்குகளுக்குள் சங்கமித்துவிடுகிறார்கள். மேற்கொண்டு படிப்பதை பற்றியெல்லாம் இவர்கள் நினைப்பதில்லை. ஆனால், இவர்களிலிருந்து சற்றே வித்தியாசப்படுகிறார் கடலூர் பானுமதி மோகன். 53 வயதுக்கு மேல் படிக்க ஆரம்பித்து, பல பட்டயப் படிப்புகளை முடித்து ஹோமியோபதி மருத்துவராகியிருக்கிறார் இவர்.

54-வது வயதில்

கடலூர் சுப்பராயலு செட்டித் தெருவில் வசிக்கும் பானுமதி மோகன் தற்போது 61 வயதைக் கடக்கிறார். அந்தக் காலத்து பி.யு.சி. படிப்போடு திருமணம், குடும்ப வாழ்க்கை என்று செட்டிலானவர். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து கடமைகளை முடித்த பிறகு, ஓய்வு நேரத்தில் என்ன செய்யலாம் என யோசித்தார் பானுமதி. அதன் விளைவுதான், 54-வது வயதில் அவரை ஹோமியோபதி மருத்துவம் படிக்க வைத்தது. அதைத் தொடர்ந்து அரோமாதெரஃபி படிப்பு, அக்குபஞ்சர் மருத்துவம், மலர் மருத்துவம் என அடுத்தடுத்து படிப்புகளை முடித்த இவர், இப்போது ஹோமியோபதியில் எம்.டி., முடித்த மருத்துவர்!

சில வருடங்களுக்கு முன் கணவர் இறந்துவிட்ட நிலையில், குடும்பத்தைக் கவனித்துக் கொண்டே, படித்த படிப்புக்கு ஏதாவது சேவை செய்யலாம் என்று நினைத்தார் பானுமதி. அப்போது, எதார்த்தமாக உறவினர் இல்லத் திருமணம் ஒன்றில், வாய் பேசமுடியாத சிறுவன் ஒருவனை பார்த்தார். அவனை எப்படியாவது பேசவைத்துவிட வேண்டும் என தீர்மானித்துக் கொண்டவர், சின்னதாய் ஒரு பரிசோதனை செய்துவிட்டு, அவனைப் பேசவைக்க மருந்து கொடுக்க ஆரம்பித்தார். அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அடுத்த சிலநாட்களில் அந்தச் சிறுவன் ரெண்டொரு வார்த்தைகள் பேசத் தொடங்கிவிட்டான்.

ஏதாவது கத்துக்கிட்டே இருக்கணும்

நாம் பானுமதியைச் சந்திக்கச் சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த பண்ருட்டியைச் சேர்ந்த ராகவன் என்ற அந்த 8 வயது சிறுவன் கைகள் குவித்து நமக்கு வணக்கம் சொன்னான். அம்மா, அப்பாவின் பெயரையும் அவன் மழலையாகச் சொல்ல, அருகிலிருந்த அவனது பெற்றோர் உணர்ச்சிவசமாகி லேசாய் கண்கலங்கிப் போனார்கள்.

ராகவன் பேசியதைக் கேள்விப்பட்டதும் அதுபோன்ற பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பானுமதியின் இல்லத்துக்கு பலரும் வந்து கொண்டி ருக்கிறார்கள். நாம் சென்றிருந்தபோது, கடலூரில் வசிக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த வசந்தி என்பவர் தனது பேரன் ஹார்த்திக்கை அழைத்து வந்திருந்தார். “பெங்களூருலகூட காமிச்சிட்டோம். அப்பவும் இவன் பேசலை, திரவ உணவுதான் சாப்பிடுவான். இவங்ககிட்ட காமிச்ச பிறகுதான் வார்த்தைகளையே பேசறான், ராய்ச்சூர்ல இருக்கிற இவனோட அப்பா, அம்மா, போன்ல இவனைப் பேசச்சொல்லிக் கேட்டு சந்தோஷப்படுறாங்க. இப்ப இட்லி, சோறெல்லாம் சாப்பிடுறான்” என்கிறார் வசந்தி. இதேபோல் கடலூரைச் சேர்ந்த செந்தில் - வித்யா தம்பதியின் மகன் ஹரீஸையும் பேசவைத்திருக்கிறார் பானுமதி. இத்தனையும் ஐம்பது வயதுக்கு மேல் பானுமதி கற்ற கல்வி அறிவால் வந்த நற்பலன்கள்.

“ஏதாவது கத்துக்கிட்டே இருக்கணும்கிறது என்னோட குணாதிசயம். அப்படித்தான், இன்னமும் படிச்சுக்கிட்டே இருக்கேன். படிச்ச அறிவை நாலு பேருக்கு பிரயோஜனப்படுற மாதிரி பயன்படுத்தணுமே.. அதுக்காகத்தான் இதுபோல சவாலா இருக்கிற பிரச்சினைகளை வைத்தியம் பார்த்துக் குணப்படுத்த முயற்சிக்கிறேன். இதால பத்துப் பேரு பலனடைஞ்சா நல்லதுதானே” அடக்கத்தோடு சொல்கிறார் பானுமதி மோகன்.

படிக்கவும் சாதிக்கவும் வயது ஒரு வரம்பில்லை. பானுமதி இன்னும் நிறையச் சாதிக்கலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x