Published : 20 Aug 2017 09:01 AM
Last Updated : 20 Aug 2017 09:01 AM

கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டு விட்டன: அதிமுக அணிகள் ஓரிரு நாளில் இணையும் - முதல்வர் கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக அறிவிப்பு

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று முதல்வர் கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரன் இடையேயான மோதல் முற்றி வருகிறது. இதையடுத்து பழனிசாமி - ஓபிஎஸ் அணிகளை இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்தன. இதற்காக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வீடு அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதையடுத்து இரு அணிகள் இடையேயான இணைப்பு முயற்சிகள் தீவிரமடைந்தன.

எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தை மூத்த அமைச்சர்கள் நேற்று முன்தினம் காலை சந்தித்து பேசினர். அன்று மாலையில் தனது ஆதரவாளர்களுடன் பேசிய பிறகு இணைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்படி, நேற்று முன்தினம் மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

அதே நேரத்தில் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமியும் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். அணிகள் இணைப்பு பற்றி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டது. இதனால், ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பூங்கொத்துகளுடன் அதிகாரிகள் அங்கு காத்திருந்தனர். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் திரண்டனர். அதிமுக தலைமை அலுவலகத்திலும் பலர் கூடினர்.

ஆனால் எதிர்பார்த்தபடி அணிகள் இணைப்பு நடக்கவில்லை. இதனால், தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். ஆட்சியிலும், கட்சியிலும் அதிகாரத்தை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதில் இரு அணிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் நேற்று முன்தினம் அணிகள் இணைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக கட்சிப் பொறுப்புகள், அமைச்சரவை இடங்களை பகிர்ந்து கொள்வதில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என ஓபிஎஸ் அணியின் சில தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

‘‘டிடிவி தினகரன் அணியினரின் செயல்பாடுகளால் முதல்வர் பழனிசாமி அணிக்குதான் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், அணிகளை அவசரமாக இணைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர். நமக்கு எந்த அவசரமோ, நெருக்கடியோ இல்லை. எனவே ஆட்சியிலும், கட்சியிலும் நமது அணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைத்த பிறகே அணிகள் இணைப்புக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்’’ என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் அவரது அணியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதம் நீண்டுகொண்டே போனது. கட்சியின் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை நள்ளிரவு வரை ஓபிஎஸ் கேட்டதால் நேற்று முன்தினம் இரவு அணிகள் இணைப்பு பற்றிய அறிவிப்பு வெளிவரவில்லை.

ஓரிரு நாளில் அறிவிப்பு

இந்நிலையில், அணிகள் இணைப்பில் 2 அணிகளுக்கும் இடையே தடையாக இருந்த பல அம்சங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘எங்களால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது. அணிகள் இணைப்புக்கு நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் இறுதி முடிவு எட்டப்படும்’’ என்றார்.

அதேபோல திருவாரூரில் நேற்று நிருபர்களிடம் பேசிய முதல்வர் கே.பழனிசாமி, ‘‘இரு அணிகள் இடையேயான கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டு விட்டன. இன்னும் ஓரிரு நாளில் 2 அணிகளும் இணையும்’’ என்று தெரிவித்தார்.

நாளை அறிவிப்பு?

மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சிகள் வாசுதேவநல்லூரில் இன்று நடக்கின்றன. அதில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரை புறப்பட்டுச் சென்றார். அவர் சென்னை திரும்பியவுடன் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. நாளை அமாவாசை என்பதால், இணைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு தலைவர்களும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பாஜக தலைவர் அமித்ஷா 22-ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். அதற்கு முன்பாக அணிகள் இணைக்கப்பட வேண்டும் என தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அணிகள் இணைப்புக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் அது அக்கட்சியின் உள்விவகாரம் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x