Published : 28 Aug 2017 03:24 PM
Last Updated : 28 Aug 2017 03:24 PM

திமுக எம்எல்ஏ.,க்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய முடியாது: உரிமைக்குழு கூட்டம் குறித்து துரைமுருகன் பேட்டி

திமுக எம்.எல்.ஏ.,க்கள் விவகாரம் குறித்து ஆலோசிக்க சட்டபேரவை உரிமைக்குழு இன்று கூட உள்ள நிலையில் திமுக உறுப்பினர்கள் மீது உடனடியாக இடை நீக்க நடவடிக்கையை உரிமைக்குழு எடுக்க முடியாது என துரைமுருகன் தெரிவித்தார்.

கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை அவைக்கு அனுமதியின்றி கொண்டு வந்ததாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக  உறுப்பினர்கள் மீதுஉரிமை மீறல் பிரச்சனை கொண்டுவரப்பட்டு உரிமைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

தற்போது அதிமுக அணிகள் இணைந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிமுகவுக்குள் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இன்று கூடிய அதிமுக எம்.எல்.ஏ, எம்பிக்கள் கூட்டத்தில் சசிகலா, தினகரன் நியமனம் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

விரைவில் பொதுக்குழுவை கூட்ட உள்ளனர். மறுபுறம் ஏற்கனவே ஆளுநரிடம் மனு அளித்த 19 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் முனைப்புடன் அதிமுக அணியினர் செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது 22 எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் உள்ள சூழ்நிலையில் உடனடியாக சட்டபேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தினகரன் தரப்பினரும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஒருவேளை ஆளுநர் சட்டபேரவையை கூட்ட உத்தரவிட்டால் அதில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வேலையில் அதிமுக அணியினர் முனைப்புடன் உள்ளனர்.

இந்நிலையில் குட்கா, பான்மசாலா பொருட்களை சபைக்குள் கொண்டு வந்ததாக உரிமைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் பற்றி ஆலோசிக்க இன்று உரிமைக்குழு கூடுவதாக பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

உரிமைக்குழு கூட்டம் மூலம் திமுக எம்.எல்.ஏக்களை இடைநீக்கம் செய்ய முயற்சிப்பதாக எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வளவு நாள் கூட்டாமல் திடீரென 40 நாட்கள் கழித்து இப்போது கூட்டும் அவசியமென்ன என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

இது குறித்து பதிலளித்த பொள்ளாச்சி ஜெயராமன் காரணம் ஒன்றுமில்லை, இதற்கு முன்னர் மூன்று மாதம் கழித்து கூட கூட்டியுள்ள முன் உதாரணமெல்லாம் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து திமுகவின் நிலைப்பற்றி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:

உரிமைக்குழு 40 நாட்களுக்கு பிறகு திடீரென கூடுவதாக சொல்கிறார்களே?

எப்போது வேண்டுமானாலும் கூட்டலாம். எப்போது நினைக்கிறார்களோ அப்போது கூட்டுவார்கள்.

உரிமைக்குழு கூட்டுவது குட்கா பிரச்சனையில் திமுக மீது நடவடிக்கை வரும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

அதற்காகத்தான் கூட்டுகிறார்கள். உரிமை மீறல் என்று கருதியிருந்தால் , உள்ளபடியே சட்டப்பேரவை முடிந்து 40 நாளைக்குள் கூட்டியிருக்க வேண்டும் அல்லவா? செய்யவில்லை, எப்படியாவது திமுகவை ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காக தூசுதட்டி இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்கள். அதனால் மு.க.ஸ்டாலின் மீதும் மற்ற உறுப்பினர்கள் மீதும் உரிமை மீறல் கொண்டு வருவார்கள்.

ஒருவேளை இடைநீக்கம் என்று நடவடிக்கைக்கு போனால் உங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக ருக்கும்?

அது எப்படி முடியும் , உரிமைக்குழு கூட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. இன்னார் இன்னார் மீது உரிமை மீறல் என்று சொல்ல வேண்டும். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் விளக்கம் இருந்தால் அதை கேட்க வேண்டும்.

உரிமைக்குழுவில் வைத்து அதை விவாதிக்க வேண்டும். அதன் முடிவை சட்டப்பேரவையில் வைத்து அதன் மீது என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவை முன்னவர் தீர்மானம் கொண்டு வர வேண்டும். அதை ஏற்று சபாநாயகர் வாக்கெடுப்புக்கு விட வேண்டும். தீர்மானம் நிறைவேறியது என்று அறிவிக்க வேண்டும்.

அப்படியானால் உடனடியாக முடிவெடுக்க முடியாது அல்லவா?

அப்படியெல்லாம் செய்ய முடியாது. அப்போது இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்றால், அன்றே சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் இது போன்று நடந்துள்ளார்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவை முன்னவர் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி இருக்க வேண்டும்.

ஆனால் சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைக்கிறார்கள் அதை வைத்து செயல்படுகிறார்கள். அதே  அதிகாரத்தை எப்படி அமல்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.

இன்றைய உரிமைக்குழு கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கலந்துக்கொள்வார்களா?

தாராளமாக கலந்துக்கொள்வோம். அழைப்பு வந்தால் கட்டாயம் கலந்துக்கொள்வோம்.

இவ்வாறு துரை முருகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x