Published : 30 Aug 2017 09:13 AM
Last Updated : 30 Aug 2017 09:13 AM

அருண் ஜேட்லி, நிர்மலாவுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: அரசியல் இல்லை என தம்பிதுரை விளக்கம்

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை தமிழக அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக அணிகள் இணைந்ததையடுத்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து, இரு தரப்பும் ஏற்கெனவே அளித்த 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரமாணப் பத்திரங்களை திரும்ப பெறவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக வி.மைத்ரேயன் எம்பி தலைமையில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, சி.வி.சண்முகம், முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன், அரக்கோணம் எம்எல்ஏ ரவி ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி, ருமேனியா நாட்டுக்கு சென்றிருப்பதாகவும், திங்கள்கிழமைதான் வருவார் என்றும் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று காலை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர்கள் உள்ளிட்ட தமிழக குழுவினர் சந்தித்தனர். அவர்களுடன் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரையும் சென்றிருந்தார். அப்போது, தமிழக திட்டங்கள் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

அதன்பின், மாலை 4.45 மணிக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து, தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய நிதி தொடர்பாகவும், தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் பேசியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து தம்பிதுரை கூறும்போது, ‘‘தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய நிதி தொடர்பாக மத்திய அமைச்சர்களிடம் பேசினோம். இதில் அரசியல் எதுவும் இல்லை’’ என்றார்

முன்னதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த பிறகு நிருபர்களிடம் தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, ‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் வெளிநாடு சென்றிருப்பதால் இப்போது சந்திக்க வாய்ப்பு ஏற்படவில்லை. மாநில, மத்திய அரசுகள் இடையே நிதி, துறை, அரசு அலுவல்கள் என பல விஷயங்கள் இருக்கும். அந்த அடிப்படையில்தான் மத்திய அமைச்சரை சந்தித்தோம். இந்த சந்திப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது’’ என்றார்.

டெல்லியிலேயே தங்கியுள்ள தமிழக அமைச்சர்கள், இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச உள்ளனர். அதன்பிறகு அவர்கள் சென்னை திரும்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x