

சமையல் எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்ததில் பெண் பலியானார். கணவன், மனைவி படுகாயம் அடைந்தனர்.
சென்னை ஓட்டேரி பெரம்பூர் நெடுஞ்சாலையில் வசிப்பவர் கிருபை அம்மாள் (70). இவருக்கு 5 மகன்கள். அனைவரும் வெளிநாட்டில் தங்கி வேலை பார்க்கின்றனர். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு கிருபை அம்மாள் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் காஸ் பரவியது.
நள்ளிரவு 1 மணியளவில் காஸ் வாசனை வீட்டின் வெளியேயும் பரவியது. இதைத் தொடர்ந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆமின்ராயா (75), அவரது மனைவி ஜூலியா(70) ஆகியோர் கிருபை அம்மாளை எழுப்பி தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த கிருபை அம்மாள் உடனடியாக மின்விளக்கைப் போட்டுள்ளார்.
வீடு முழுவதும் ஏற்கெனவே காஸ் பரவியிருந்ததால் உடனடியாக வீட்டில் தீப்பிடித்தது. தீயின் உக்கிரத்தால் வீட்டின் சுவர் இடிந்தது. கிருபை அம்மாள், ஆமின் ராயா, ஜூலியா ஆகியோர் இந்த தீயில் சிக்கினர். அவர்களின் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்த வர்கள் ஓடிவந்தனர். 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் கிருபை அம்மாள் பரிதாபமாக இறந்து விட்டார். ஆமின்ராயா, ஜூலியா ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.