காவிரியில் அணை: அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு தா.பாண்டியன் கோரிக்கை

காவிரியில் அணை: அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு தா.பாண்டியன் கோரிக்கை
Updated on
1 min read

காவிரியாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சென்னையில் தா.பாண்டியன் கூறியதாவது:

காவிரியில் அணை கட்டினால், அது டெல்டா மாவட்ட விவசாயிகளை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதையுமே பாதிக்கும். எனவே, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டத்தை தமிழகம் முழுமைக்கும் கொண்டு செல்லும் வகையில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து டிசம்பர் மாதம் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை அறிவிக்க வேண்டும். இதற்கு அனைத்து கட்சி தலைவர்களிடமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு திரட்டும்.

தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்துக்கான உணவு பொருட்கள் வழங்கி, பரிசோதனை செய்து, தடுப்பூசிகளையும் வழங்கி வருகிறது. எனவே, தருமபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் குழந்தைகள் இறப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடு என்று கூறுவது நம்பத்தக்கது கிடையாது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த பிரச்சினை தொடர்பாக சட்டமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in