Published : 28 Aug 2017 09:01 AM
Last Updated : 28 Aug 2017 09:01 AM

ஆஸ்திரேலிய பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை: கோயம்பேடு பழச் சந்தையை ஆஸ்திரேலிய அமைச்சர் பார்வையிட்டார்

ஆஸ்திரேலியா நாட்டு பழங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அளவை அதிகரிக்கும் விதமாக, ஆஸ்திரேலிய அமைச்சர் தலைமையிலான குழு, கோயம்பேடு பழச்சந்தையை நேற்று பார்வையிட்டு, பழ வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

அமைச்சர் தலைமையிலான குழுவை கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு அலுவலக முதன்மை நிர்வாக அலுவலர் பி.பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் சி.ஆர்.ராஜன்பாபு ஆகியோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அந்த குழு, கோயம்பேடு பழ சந்தையில் உள்ள கடைகளையும், அங்கு விற்கப்படும் பழங்களையும் பார்வையிட்டனர். பின்னர், பழ வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சீனிவாசன் மற்றும் துரைசாமி உள்ளிட்டோரிடம், சந்தை நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் ஆஸ்திரேலிய அமைச்சர் லூக் ஆர்ட்சூய்கெர் நிருபர்களிடம் கூறும்போது, “ஆஸ்திரேலிய லிச்சி, ஸ்ட்ராபெரி, இனிப்பு அன்னாச்சிபழம் உள்ளிட்ட பழங்களுக்கு உலக அளவில் நல்ல சந்தை வாய்ப்பு கள் உள்ளன. அந்நாட்டின் ஒட்டுமொத்த பழ உற்பத்தியில் இந்தியாவுக்கான ஏற்றுமதி சந்தை மதிப்பு 10 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் ஆஸ்திரேலிய நாட்டு பழங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்புகள் உள்ள நிலையில், அதைப் பயன்படுத்திக்கொண்டு, இந்திய நாட்டுக்கான பழ ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக கோயம் பேடு பழ சந்தையை பார்வையிட்டு, பழ வியாபாரிகளுடன் கலந்துரையாடினோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x