Last Updated : 21 Aug, 2017 10:16 AM

 

Published : 21 Aug 2017 10:16 AM
Last Updated : 21 Aug 2017 10:16 AM

மும்மொழிக் கொள்கையால் மிளிரும் மலுமிச்சம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி: தன்னார்வலர்கள் பங்களிப்பால் தரம் உயர்வு

அது ஒரு மதிய இடைவேளை நேரம். ஆசிரியர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாணவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களும் சளைக்காமல் பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் மதிய உணவு சாப்பிடுகிறார்கள். சிலர் காகிதங்களில் கலைப் பொருட்களை செய்கிறார்கள். சிலர் கழிப்பறைச் சுவர்களில் எழுதியிருக்கும் நன்னெறிக் கதைகளை படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில மாணவர்களோ பள்ளித் தோட்டத்தில் காய்கறிப் பயிர்களுக்கு நீர்ப் பாய்ச்சுகிறார்கள்.

நாம் பார்த்துப் பழக்கப்பட்ட ‘அரசுப் பள்ளிகள்’ என்ற அடையாளத்திலிருந்து இப்படியாக, மொத்தமாக மாறியிருக்கிறது கோயம்புத்தூர் அருகேயுள்ள மலுமிச்சம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி. நா நுனியில் மும்மொழித் திறமையும், ஷூ, டை, பேட்ஜ் என மிடுக்கான தோற்றமும்கொண்ட மாணவர்கள் நமக்கு தனியார் பள்ளிகளை நினைவுபடுத்துகிறார்கள். மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக விருது பெற்ற இந்த அரசு பள்ளி, தற்போது கிராமத்தையே சுகாதாரமாக மாற்றியதற்கான விருதையும் பெற்று பெருமை சேர்த்துள்ளது. அரசாங்கமும், ஆசிரியர்களும் நினைத்தால் சிறப்பான அரசுப்பள்ளியை உருவாக்கலாம். அவர்களுடன் கல்வியில் ஆர்வம் கொண்ட தன்னார்வலர்களும் கைகோர்த்தால் மிகச் சிறப்பான முன்மாதிரிப் பள்ளியாக மாற்ற முடியும் என்பதற்கு இந்த பள்ளி சிறந்த உதாரணம்.

கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்துக்குட்பட்டது மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. 1964-ல் தொடங்கப்பட்டது இந்த பள்ளி. 4 வருடங்களுக்கு முன்பு புதிதாக பொறுப்பேற்ற தலைமையாசிரியர், அவரது எண்ணமறிந்து செயல்படும் ஆசிரியர்கள் ஆகியோரின் முயற்சியால் இன்று அந்த வட்டாரத்திலேயே தனியார் பள்ளிகளுக்கு போட்டி தரும் விதத்தில் உருவெடுத்துள்ளது.

வடமாநிலக் குழந்தைகள்

மலுமிச்சம்பட்டி தொழில் நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதி. வடமாநிலத்தவர்கள் ஏராளமானோர்இங்கு வசிக்கிறார்கள். தமிழ் அறியாத, அவர்களது குழந்தைகள் 40 பேரை, தமிழ் மாணவர்களாக மாற்றியிருப்பது இப்பள்ளி ஆசிரியர்கள் எடுத்த முயற்சியின் வெற்றி. ஒரிசாவை பூர்வீகமாகக் கொண்ட ரோனக் என்ற 3-ம் வகுப்பு மாணவன், கர்மவீரர் காமராஜரைப் பற்றி அழகு தமிழில் பேசியபோது அதை நம்மால் உணர முடிந்தது.

“ஒரு மொழியைப் பற்றி எதுவுமே தெரியாத, அதுவும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது எளிது எனப் புரிந்து கொண்டோம். அதுவே நடந்தது. இன்று 40 வடமாநில குழந்தைகளும் தமிழை புரிந்து பேச, எழுத பழகியுள்ளனர். அடுத்ததாக ஆங்கிலத்தையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறோம். பியானோ உள்ளிட்ட இசைப் பயிற்சிகளையும் அளிக்க உள்ளோம்” என்கிறார் ஆசிரியர் நிர்மலதா.

கழிப்பறைச் சுவர்களில் வசவு வார்த்தைகள் தான் இருக்கும் என்ற நிலையை மாற்றி கார்ட்டூன் ஓவியங்களோடு நன்னெறிக் கருத்துகளை வரைந்துள்ளனர். இடைவேளை வரும் போதெல்லாம் அதை மாணவர்கள் ஆர்வமுடன் படித்துச் செல்கின்றனர். மாணவர்களே எழுதிப்பார்க்க உயரம் குறைந்த கரும்பலகைகள், குழு விவாதம் நடத்த வண்ண வண்ண மேசைகள், கழிவு காகிதங்களில் கலைப் பொருட்கள் தயாரிப்பு என திரும்பும் திசையெங்கும் கவனம் ஈர்க்கும் கற்றல் நுணுக்கங்களால் சிறந்து விளங்குகிறது இந்த பள்ளி.

கற்றல் முறைகளைக் குறித்து ஆசிரியர் விவேகானந்தி கூறும்போது, ‘குழந்தைங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறது தான் சிரமம். சரியா சொல்லிக் கொடுத்தா புரியவைக்கிறது சுலபம். அதுக்காகவே ஒவ்வொரு வகுப்புக்கும் தினமும் 45 நிமிஷம் ஸ்மார்ட் கிளாஸ் எடுக்கிறோம். வகுப்புல என்னென்ன பாடம் இருக்கோ, அதெல்லாம் இங்கேயும் டிஜிட்டல் வடிவத்துல இருக்கு. ஒலி, ஒளி வசதி இருக்கிறதால படம் பார்க்கிறதப் போல, பாடத்தை படிக்கிறாங்க” என்றார்.

வேளாண்மை குறித்த கல்வியிலும் இந்தப் பள்ளி சிறந்து விளங்குகிறது. பள்ளியின் முன்புள்ள தோட்டத்தை ஆசிரியர்களும், வகுப்பறைகளுக்கு பின்னுள்ள இடங்களை அந்தந்த வகுப்பு மாணவர்களும் பராமரிக்கின்றனர். வாழை, முருங்கை, கத்தரி என சமையல் காய்கறிகள் முதல் பூ, எண்ணெய் வித்துக்கள், கிழங்கு வகைகள் வரை விளைகிறது. இங்கு விளையும் பொருட்களே அவ்வப்போது சத்துணவுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

குட்டி கமாண்டோக்கள்

சமீபத்தில் இந்த பள்ளி மாணவர்கள் பெற்ற விருது பற்றி கிராமத்தில் நகைச்சுவையோடு பேசப்படுகிறது. சாலையோரங்கள், வீதிகள், பள்ளி விளையாட்டு மைதானம் போன்ற பொது இடங்கள் திறந்த வெளிக் கழிப்பிடமாக பயன்படுத்துவதை இந்த பள்ளி மாணவர்கள் தடுத்து வருகிறார்கள். இது பற்றி தெரிவித்த 5-ம் வகுப்பு மாணவி சம்யுக்தா, “ஆமாங்க சார், இன்னிக்கு காலைல கூட 20 பேர விரட்டினோம். எங்க டீம் பேரு, ‘குட்டி கமாண்டோ படை’. இதுல பத்து பேரு இருக்கோம். தினமும் காலைல அஞ்சு மணிக்கு விசில் எடுத்துட்டு போவோம். யாராச்சும் ரோட்டோரமா காலைக்கடன் கழிக்க ஒதுங்குனா உடனே விசில் அடிச்சு விரட்டுவோம். இப்ப எங்க ஊருக்குள்ள திறந்தவெளியில யாரும் மலம் கழிக்கிறதே இல்ல. அதுக்குத்தான் எங்களுக்கு விருது கொடுத்தாங்க” என்றார் மழலைக் குரலில். இது சாதாரணமான முயற்சியாகத் தெரியவில்லை. கிராமத்தையே சுகாதாரமாக மாற்றுவது என்பது கல்வியுடன் கலந்த ஒரு சமூகப் பொறுப்பாகவே பார்க்க முடிகிறது.

இத்தனை வளர்ச்சிகளுக்கும் காரணம் தலைமை ஆசிரியர் இரா.சதி என ஒட்டுமொத்த பள்ளியும், ஊரும் அவரை நோக்கி கைகாட்டுகிறது. ஆனால் அவரோ, ‘நாங்கள் எதையுமே புதிதாகச் செய்யவில்லை. இருந்த வசதிகளையே சிறப்பாக்கியுள்ளோம். பள்ளிக்குத் தேவையானவற்றுக்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஒருவர் உதவினார். எல் அண்ட் டி நிறுவனமும் எங்கள் பள்ளியைத் தத்தெடுத்தது. இடிந்திருந்த கட்டிடம் புனரமைப்பு, புதிய கட்டிடம், மார்பிள் தரை, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர், கூடுதல் ஆசிரியர்கள், ஸ்மார்ட் வகுப்பறை, வண்ண மேசைகள் என சுமார் ரூ.27 லட்சம் வரை அந்த நிறுவனம் உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறது. அதேபோல, விகேசி காலணி தயாரிப்பு நிறுவனத்தினர் கடந்த 4 வருடங்களாக மாணவர்களுக்கு ஷுக்கள், இருக்கைகள் கொடுக்கிறார்கள். மாணவர்களுக்கு பேட்ஜ் தேவை என்றதும் மெஷர் கட்டிங் என்ற நிறுவனம் உதவியது. இப்படி, கல்வி மீது ஆர்வம் கொண்ட தன்னார்வலர்கள் உதவியால் இந்த பள்ளிக்கு ஏராளமான வசதிகள் கிடைத்துள்ளன. அதுபோக, பள்ளி மீது அதிகாரிகளுக்கும், மக்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ள அக்கறையே இந்த பெருமைக்கு காரணம். இந்தப் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளிலேயே எங்கள் பள்ளியில்தான் 266 மாணவர்கள் படிக்கிறார்கள்” என்றார் பெருமிதத்தோடு.

‘கல்வியை ஆழ்ந்து உணர்ந்து, நுகர்ந்து, செயல்படுத்தி, எளிதாக்கிக் கற்பதே செயல்வழிக் கற்றல்’ என்று மாணவர்களுக்கு அவர் கொடுத்த விளக்கமும் ஆச்சரியமாகவே இருந்தது.

தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 75026 42621

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x