Published : 31 Aug 2017 09:37 AM
Last Updated : 31 Aug 2017 09:37 AM

பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படும்: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு

வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். நினைவைப் போற்றியும், அவர் ஆற்றிய பணிகள், அவரது வாழ்க்கை வரலாற்றை இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையிலும் மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, மாநில அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவப் படத்தைத் திறந்து வைத்து ரூ.75.81 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ள 58 திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். தொடர்ந்து ரூ.27.34 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசியதாவது:

ஓரணியில் இருப்போம்

எந்த தியாகம் செய்தாவது கழகத்தையும் ஆட்சியையும் காப்போம். எந்த சக்தியாலும் அதிமுகவை ஒடுக்கி விட முடியாது. எனக்கு பின்னால் 100 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடரும் என்று ஜெயலலிதா கூறினார். அவர் கூறியது போல எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்த இந்த ஆட்சி மேலும் வலுப்பெறும். எங்களை எந்த சக்தியும் ஒடுக்கிவிடமுடியாது. கழகத்தைக் காக்க அனைவரும் ஓரணியில் இருப்போம்.

சுயநலத்துக்காக யாரும் இந்த இயக்கத்தை கூறுபோட விடமாட்டோம் என்பதை அண்ணா பிறந்த இந்த மண்ணில் சபதம் ஏற்போம். அரசையும் கட்சியையும் தனி நபர் ஒருவர் கைப்பற்றி விடலாம் என நினைக்கிறார். அந்த கனவு என்றும் பலிக்காது. சிலர் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.

பெயர் மாற்றம்

காஞ்சி - விளையாட்டு அரங்கம், அண்ணா விளையாட்டு அரங்கம் எனவும், உத்திரமேரூர் கலைக் கல்லூரி இனி எம்.ஜி.ஆர். கலைக் கல்லூரி எனவும் பெயர்மாற்றம் செய்யப்படும். மழை நீர் கடலில் கலப்பதை தடுக்க பாலாற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். திருக்கழிகுன்றம் பகுதியில் கடல் நீர் உட்புகாமல் இருக்க தடுப்பணை கட்ட தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஓ.பன்னீர்செல்வம்

நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடக்கிறது. அதிமுகவில் குடும்ப ஆட்சி, அராஜக ஆட்சிக்கு இடமில்லை. மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆட்சி நடக்கிறது. எங்களை நம்பிய யாரும் கெட்டு போக மாட்டார்கள்; கெட்டு போகவும் விட மாட்டோம்” என்றார்.

இவ்விழாவில் சட்டப்பேரவை தலைவர் ப. தனபால், தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சி.சீனிவாசன், பி. தங்கமணி, எம்.சி. சம்பத், ஓ.எஸ். மணியன், சேவூர் எஸ். ராமச்சந்திரன், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் கே.என்.ராமச்சந்திரன், மரகதம் குமரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் இரா. வெங்கடேசன் வரவேற்று பேசினார். மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா நன்றி கூறினார்.

சிறப்பு தபால் தலை வெளியீடு

முன்னதாக விழாவில் எம்.ஜி.ஆர். சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த தபால் தலையை முதலமைச்சர் கே.பழனிச்சாமி வெளியிட, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்று கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x