Published : 03 Aug 2017 08:50 PM
Last Updated : 03 Aug 2017 08:50 PM

ஆறு ஆண்டுகளில் இந்தியர்கள் உணவுக்காக செலவிடுவது இரட்டிப்பாகும்: மத்திய அமைச்சர்

அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்தியர்கள் உணவிற்காக செலவிடுவது இரட்டிப்பாகும் என்று மத்திய உணவு பதனிடும் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறினார்.

இந்தியாவின் உணவு மற்றும் உணவு பதனிடும் துறை குறித்து உலகிற்கு தெரிவிக்கவும் உலக உணவு பதனிடும் துறையினர் இந்திய உணவு வகைகளை தெரிந்து கொள்ளவும் புதுடெல்லியில் நவம்பர் மாதம் 3 முதல் 5-ந்தேதி வரை பிரமாண்ட அளவில் 'உலக உணவு இந்தியா-2017' என்ற தலைப்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில் உணவு பதனிடும் துறையில் ஈடுபட்டுள்ள தமிழக தொழிற்துறையினர் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மத்திய உணவு பதனிடும் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

''டெல்லியில் நடைபெற உள்ள கண்காட்சி இதுவரை இந்தியாவில் நடைபெறாதது. இந்தியா கேட் அருகில் ராஜபாதையின் இரு பக்கமும் அரங்குகள் அமைக்கப்பட்டு இந்திய உணவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும். இந்தக் கண்காட்சியில் இந்திய உணவுப் பொருட்கள் குறித்து உலக உணவு பதனிடும் துறையினர் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைப்பதால் அவர்கள் இந்தத் துறையில் முதலீடு செய்ய முன்வருவார்கள்.

உலக அளவில் உணவு உற்பத்தில் முன்னணியில் இருக்கும் இந்தியாவில் உணவுப் பொருட்கள் குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகள் வீணாவது வேதனைக்குறியது. இந்தியாவில் 10 சதவீத உணவுப் பொருட்களே பதனிடப்படுவதாகவும், 2 சதவீத பழம் மற்றும் காய்கறிகளே பதனிடப்படுகிறது.

நாடெங்கும் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வரும் நிலையில் அவர்கள் நல்வாழ்விற்கு ஏதேனும் செய்ய முடியும் என்றால் அது உணவு பதனிடும் துறையாக மட்டுமே இருக்க முடியும். உணவு பதனிடும் துறையின் வளர்ச்சி காரணமாக விவசாயிகளின் விளைபொருட்களுக்கு தேவை அதிகரிக்கும். விளைச்சலை அதிகரிக்க விவசாயிகள் அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

தமிழ்நாட்டில் உணவு பதனீட்டுத்துறையில் காணப்படும் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்தது. இன்றைக்கு மக்கள் உடல் ஆரோக்கியம் பற்றி சிந்திக்க தொடங்கியுள்ள நிலையில், அனைவரும் இயற்கை உணவை நாடுகின்றனர். எனவே தென்னை மரத்தில் இருந்து பெறப்படும் நீரா பானத்தை நாம் உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும்.

இன்றைக்கு இந்தியாவின் சில்லறை விற்பனை சந்தை 600 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதில் 70 விழுக்காடு உணவு பொருட்களுக்கான சந்தை. அடுத்த ஆறு வருடத்தில் இந்தியர்கள் உணவிற்காக செலவிடுவது இரட்டிப்பாக்கும் என்று கருதப்படுவதால் உணவு பதனிடும் துறை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. விளைபொருட்கள் வீணாகாமல் தடுக்க உணவு பதனிடும் துறையின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் உணவு தட்டுகளில் வீணாகிறது. நம் நாட்டில் உணவுப் பொருட்கள் அறுவடை நிலையில் வீணாகிறது.

மிகப் பெரிய முதலீடு தேவைப்படும் உணவு பதனிடும் துறைக்கு ஊக்கம் அளிக்க அரசு பல முக்கிய நடவடிக்கை எடுத்து வருகிறது. விளைநிலங்களுக்கு அருகில் உணவு பதனிடும் தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் வாழை சாகுபடி செய்யும் விவசாயி ஒருவரை சந்தித்த பின்னர் தான் பல்வேறு வகையான வாழைப்பழங்கள் இருக்கின்றன என்பதை நான் தெரிந்துகொண்டேன். ஒருவரை சந்திக்கும் போதே பல விஷயங்களை தெரிந்து கொள்ளும் போது, கண்காட்சியில் பலரையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது உலகின் சிறந்த பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்'' என்றார் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x