Published : 10 Nov 2014 09:04 AM
Last Updated : 10 Nov 2014 09:04 AM

`ஜி.கே. வாசன் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: நிலக்கோட்டை ஏ.எஸ். பொன்னம்மாள் சிறப்பு பேட்டி

‘புதிய கட்சி தொடங்குவதன் மூலம் ஜி.கே.வாசன் மிகப்பெரிய தவறு செய்து விட்டார்.’ என மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எஸ். பொன்னம்மாள் தெரிவித்தார்.

நிலக்கோட்டை ஏ.எஸ். பொன்னம்மாள் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளால் ‘அக்கா’ என அன்போடு அழைக்கப்படுபவர் ஆவார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, பழநி சட்ட மன்றத் தொகுதிகளில் இருந்து 1957-ம் ஆண்டு முதல் ஏழு முறை எம்எல்ஏவாகத் தேர்ந் தெடுக்கப்பட்டவர்.

காங்கிரஸ் மாநில மகளிரணி தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். கருணாநிதி, அன்பழகனுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவைக்கு அதிகமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அதிமுக கூட்டணியை எதிர்த்து, மூப்பனார் தமாகாவை தொடங் கியபோது, அவருடன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, தமாகாவின் முக்கியத் தலை வர்களில் ஒருவராக வலம் வந்தவர். மூப்பனார் இறந்தபின்னர், அவரது மகன் வாசனுடன் தமாகாவில் இணைந்து செயல்பட்டார்.

90 வயதை தாண்டி விட்ட தால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். தற்போது ஜி.கே.வாசன் காங்கிரஸை விட்டு வெளி யேறி புதிய கட்சி தொடங்கவுள்ள நிலையில், ஏ.எஸ். பொன்னம்மாள் காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

‘தி இந்து’ செய்தியாளரிடம் அவர் அளித்த பேட்டி:

என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

ரொம்ப மனநிறைவாக இருக்கிறேன். கட்சிக்காரர் கள், கிராம மக்கள் வழக்கம் போல ஏதாவது பிரச்சினைன்னா ஓடோடி வருகின்றனர். நான் அதிகாரிகளிடம் போனில் பேசி, என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.

வாசன் புதுக்கட்சி தொடங்குவதால், காங்கிரஸுக்கு பாதிப்பு ஏற்படுமா?

அவரது கட்சியால் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. மூப்பனார் தமாகா ஆரம்பித்த சூழ்நிலை வேறு, இப்போதைய அரசியல் சூழ்நிலை வேறு. மக்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சிருக்க வேண்டும். எதுவுமே செய்யாமல், சும்மா புதுக்கட்சி ஆரம்பிச்சால் எந்தப் பிரயோஜனமும் இல்ல.

உங்களுடைய பார்வையில் வாசன் பற்றி?

மத்திய அமைச்சராக இருந்தவர். சிறந்த அறிவாளி. கொஞ்ச காலம் பொறுமையாக காங்கிரஸிலேயே இருந்திருக்க லாம். புதுக்கட்சி ஆரம்பிப்பது சாதாரண விஷயம் இல்லை. தொடர்ந்து கட்சியை நடத்த வேண்டும். புதுக்கட்சி ஆரம்பிக்கப் போவதன் மூலம் வாசன் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். அவர் வளர வேண்டியவர். வருத்தமாக உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்டது பற்றி?

சரியான நேரத்தில் கட்சித் தலைமை இளங்கோவனை தலைவராக நியமித்துள்ளது. அவர் அந்தப் பதவிக்கு பொருத்த மானவர்தான். காங்கிரஸ் கட்சியை வளர்க்க பாடுபடக் கூடியவர். அவருக்கு துணையாக இருந்து, காங்கிரஸை வாசன் வலுப்படுத்தி இருக்க வேண்டும்.

தமிழகத்தில் காங்கிரஸ் நிலைமை எப்படி உள்ளது?

செல்வாக்குடன்தான் உள்ளது. காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற உத்வேகமும், ஆசையும் நிர்வாகிகள், தொண்டர்களிடம் குறையாமல் இருப்பது நல்ல அறிகுறிதான்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றது பற்றி?

அவருக்கு இந்த அவப் பெயர் ஏற்பட்டிருக்கக் கூடாது. ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன். நிர்வாகத் திறன்மிக்க அவரால் எதுவும் செய்ய முடியும். அவர் தெரிந்து இந்த தவறை செய்திருக்க மாட்டார். மற்றவர்கள் பேச்சை கேட்டு செய்துவிட்டார்.

அந்தகால சட்டமன்றத்துக்கும், இப்போதைய சட்டமன்றத்துக்கும் என்ன வித்தியாசம்?

ஒப்பிட்டுக்கூட பார்க்கவே கூடாது. முன்பெல்லாம் சட்டமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் நடக்கும். தவறான வார்த்தை பிரயோகம் இருக்காது. அப்படியே பேசிவிட்டால் பேரவைத் தலைவர் உடனே சபைக் குறிப்பில் இருந்து நீக்கிவிடுவார். இப்போது எப்படி சம்பாதிக்கலாம் என்ற மனநிலையிலேயே அரசிய லுக்கு வருகின்றனர். அரசியல் அரசியலாக இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x