

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் கேள்வி-பதில் வடிவில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கர்நாடகாவில் மேகேதாட்டு என்னும் இடத்தில் காவிரியின் குறுக்கே 48 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இரண்டு அணைகளை கட்ட கர்நாடக அரசு முடிவு செய் துள்ளது. கர்நாடக மாநிலத்துக்குள் ஓடும்போது காவிரியை பயன் படுத்திக் கொள்ள முழு உரிமை உள்ளது என்றும், இதனை தமிழக அரசு தடுத்திட முடியாது என்றும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியுள்ளார். மேலும், அம்மாநில முதல்வர் சித்தராமையா, ‘கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதால் ஒரு பயனும் ஏற்படாது’ என்று கூறியுள்ளார். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாஜகவின் அனந்தகுமார், காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை வரவேற்பதாகவும், தமிழக எம்.பி.க்கள் இதனை எதிர்த்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுத்தால், அதற்குரிய பதிலடி கொடுப்போம் என்றும் பேசியுள்ளார்.
கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த 22-ம் தேதி நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக,காங்கிரஸ்,மதிமுக,பாமக, விசிக, மமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இந்த பிரச்சினையில் வழக்கம் போலவே பிரதமருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித் துள்ளார். இதைத் தவிர வேறு நடவடிக்கைகளை எடுப்பது போல் தெரியவில்லை. ஆனால் கர்நாடகத்திலோ அனைத்து கட்சி களும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இப்பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கூறினால், எதேச்சதிகார தொனியில் முதல்வர் பதில் சொல்கிறார். முதல்வர் பன்னீர்செல்வத்தின் இந்த கருத்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பதைபதைத்துப் போயுள்ளார்கள்.
மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அடுத்தாண்டு மே மாதம் நடத்தப்படும் என்று கூறப் பட்டுள்ளது. இது சென்ற அக்டோபர் மாதத்திலேயே சென்னையில் நடந்திருக்க வேண்டும். தமிழக தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்திட கர்நாடக முதல்வர், மத்திய பிரதேச முதல்வர், ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் தமிழகம் வந்து, தங்கள் மாநிலங்களில் முதலீடு செய்தால் சலுகை வழங்குவதாக கூறியுள்ளனர். இவையெல்லாம் நடந்த பிறகு முதல்வர் பன்னீர்செல்வம் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வசதி படைத்தோருக்கு சமையல் கேஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்யவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். ஏழை, எளிய நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில் இதற்கான அளவுகோல்களை நிர்ணயிக்க வேண்டும். மத்திய அரசு அனைவருக்குமான அரசு என்று மோடி கூறியுள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மனுக்கு பதிலாக சமஸ்கிருதம் பாடம் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. இதனை ஆர்.எஸ்.எஸ், சங்க் பரிவார் போன்ற மத்திய ஆட்சிக்கு உறுதுணையாக உள்ள அமைப்புகள் வரவேற் றுள்ளது மதசார்பின்மை நம்பிக்கை கொண்டோரை அதிர்ச்சியாக்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.