Published : 28 Aug 2017 09:23 AM
Last Updated : 28 Aug 2017 09:23 AM

முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவை வாபஸ் பெற்ற எம்எல்ஏக்கள்: பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் - ஆளுநரிடம் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

முதல்வர் பழனிசாமி அரசு, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினர்.

அதிமுக இரு அணிகளும் இணைந்ததைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கடந்த 22-ம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் 19 அதிமுக எம்எல்ஏக்கள் நேரில் கடிதம் அளித்தனர். பின்னர் 19 எம்எல்ஏக்களும் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மும்பை சென்ற ஆளுநர், நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று காலை 10.30 மணி அளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக முதன்மைச் செயலாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் தலைமையில் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்எல்ஏக்கள் சந்தித்தனர்.

மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்எல்ஏக்கள் ஜெ.அன்பழகன், எஸ்.விஜயதரணி, அபூபக்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சந்திப்பு முடிந்ததும் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:

முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக 19 அதிமுக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் நேரில் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர். இப்போது மேலும் சில அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் பழனிசாமி அரசுக்கு 113 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.

எனவே, பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. பெரும்பான்மையை இழந்த அரசு நீடிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என கடந்த 22-ம் தேதி ஆளுநருக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதனை ஆளுநரிடம் எடுத்துக் கூறினோம்.

கடந்த பிப்ரவரியில் ஓபிஎஸ் அணியில் 11 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். இவர்கள் எதிர்த்து வாக்களித்தாலும் பழனிசாமி அரசு கவிழாது என்ற நிலையிலும் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார். தற்போது 19 எம்எல்ஏக்கள் ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்துள்ளனர். எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.

‘அனைத்தையும் அறிவேன். சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என ஆளுநர் உறுதி அளித்தார். குறிப்பிட்ட காலத்துக்குள் ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். இல்லையெனில் குடியரசுத் தலைவரிடம் முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை. அந்த நிலைக்கு ஆளுநர் தள்ளமாட்டார் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x