Published : 29 Aug 2017 12:16 PM
Last Updated : 29 Aug 2017 12:16 PM

ராணிப்பேட்டை அருகே திறந்தவெளியில் நடக்கும் பார்கள்: மதுபானக் கடையால் நிம்மதியிழந்த குடும்பங்கள் - அச்சத்துடன் பணிக்கு வந்து செல்வதாக பெண்கள் குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை வி.சி.மோட்டூர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால், தோல் தொழிற்சாலைக்குச் செல்லும் பெண்கள் அச்சமடைந்துள்ளனர் என்று, வாசகர் முகமது பிலால் என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் புகாரை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை வி.சி.மோட்டூர் எம்பிடி சாலையில் ஏராளமான தோல் தொழிற்சாலைகள் மற்றும் காலணி உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதில், ஏராளமான ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள டேவிட் ஷூ தொழிற்சாலையின் பின்புறமாக டாஸ்மாக் மதுபானக் கடையை திறந்தனர். இந்தக் கடையை திறந்த பிறகு, தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தினந்தோறும் இங்கு வந்து மது அருந்துகின்றனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலை 10 மணியிலிருந்து இரவு வரை திறந்திருக்கும் மதுபானக் கடைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. மதுபானக் கடை வந்த பிறகு இந்தப் பகுதியில் நிறைய பெட்டிக் கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர், ஊறுகாய் விற்பனையும் அதிகரித்துவிட்டது. இங்கு திடீரென தொடங்கப்பட்ட பல கடைகள் பார்களாக மாறியுள்ளன. அத்துடன் திறந்தவெளிப் பகுதியை பார்களாக குடிமகன்கள் பயன்படுத்துகின்றனர்.

இதனால், காலை மற்றும் மாலை நேரத்தில் தொழிற்சாலைக்கு வந்து செல்லும் பெண்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். சில நேரங்களில் மதுபோதையில் இருப்பவர்கள் பெண்களை கேலி செய்வதால் வீண் தகராறு ஏற்படுகிறது. இதுகுறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டது முதல், தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் நிம்மதியிழந்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘புதிய டாஸ்மாக் கடையால் ஏற்பட்ட பிரச்சினை குறித்து அவ்வப்போது புகார் வருகிறது. நாங்களும் அடிக்கடி ரோந்து சென்று சரி செய்கிறோம்.

ஆனால், அந்த இடத்திலிருந்து கடையை அகற்றுவது டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் இருக்கிறது.

இப்போதுள்ள நிலையில் திறக்கப்பட்ட மதுபானக் கடையை மூடுவது என்பது இயலாத காரியம். கடையை அகற்றுவது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை வைத்தால், ஒருவேளை பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x