Published : 30 Aug 2017 08:55 AM
Last Updated : 30 Aug 2017 08:55 AM

திண்டிவனத்தில் கின்னஸ் சாதனைக்காக 5,366 கத்தரிச்செடி நட்ட கல்லூரி மாணவர்கள்: பாரம்பரிய விதைகளின் மகத்துவத்தை உணர்த்த நடிகர் ஆரி பங்கேற்பு

பாரம்பரிய நாட்டு விதைகளின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும். கின்னஸ் சாதனைக்காகவும் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை சார்பில் திண்டிவனம் அருகே ஆவணிப்பூர் கிராமத்தில் நேற்று ‘நானும் ஒரு விவசாயி’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னை அருகே உள்ள இரு தனியார் பொறியியல் கல்லூரிகளின் மாணவ, மாணவியர்கள் 2,683 பேர் கலந்துகொண்டு 3 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரே நிமிடத்தில் 5,366 நாட்டுக் கத்தரி செடிகளை நட்டனர்.

இந்நிகழ்ச்சியை நடிகர் ஆரி ஒருங்கிணைத்து நடத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிய மற்றும் தென்னிந்திய சாதனை புத்தக பொறுப்பாளர் விவேக், சத்தியபாமா பல்கலைக்கழக துணைவேந்தர் மரியஜீனா, டிரான்ஸ் இந்தியா நிறுவனர் ராஜேந்திர ராஜன், பாலம் கல்யாண சுந்தரம், நாட்டுப்புறப் பாடகி சின்னபொண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி குறித்து நடிகர் ஆரி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

இதேபோன்ற நிகழ்வை சீன அரசு இந்த ஆண்டு 2,017 பேரை வைத்து நடத்தியுள்ளது. இப்போது நாம் இந்த நிகழ்வை 2,683 பேரை வைத்து நடத்தியுள்ளோம். மக்களிடமும், மாணவர்களிடமும் ‘நானும் ஒரு விவசாயி’ என்ற விழிப்புணர்வை ஊட்டியுள்ளோம். ஒவ்வொருவரும் நானும் ஒரு விவசாயியாக மாறி தனக்கான உணவை தானே உற்பத்தி செய்யும் நிலைக்கு வரவேண்டும். ‘விவசாயம் வியாபாரம் அல்ல. வாழ்க்கை முறை’ என்று நம்மாழ்வார் கூறியுள்ளார்.

வாழ்க்கைமுறை சார்ந்த விவசாயத்தை மீட்டெடுக்கவும், நாட்டு விதைகளைக் காப்பாற்றவும் இந்த முயற்சியை செய்துள்ளோம். இனி ஒவ்வொருவரும் நாட்டு விதைகளை விதைத்து நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்யும் விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. இங்கு 3 ஏக்கரில் நாட்டுக் கத்தரி செடி நடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கம்பு, கேழ்வரகு நடப்பட உள்ளது. இங்கு கூடியிருக்கும் யாரும் விவசாயி இல்லை. கல்வி முறைகளில் விவசாயப் படிப்புகளை கொண்டுவர வேண்டும். வளரும் சமூகத்துக்கு உணவுசார்ந்த விழிப்புணர்வை கொண்டுவரவேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பை எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x