Published : 15 Aug 2017 09:35 AM
Last Updated : 15 Aug 2017 09:35 AM

தொழில் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன: ஸ்டாலினின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய நிர்மலா சீதாராமன் - துரைமுருகன் கருத்து

திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் தொழில் துறை நசிந்து வருகிறது. புதிய தொழில் முனைவோர் எவரும் தமிழகத்துக்கு வருவதில்லை. ஏற்கெனவே நடந்து வரும் தொழில்களும் பக்கத்து மாநிலமான ஆந்திராவுக்கு சென்று கொண்டிருக்கின்றன’’ என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்து வந்தார்.

அதற்கு பதிலளித்த தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர், ‘‘எந்தவொரு தொழிலும் தமிழகத்தை விட்டுச் செல்லவில்லை. தமிழகத்தில் தொழில் துறை நாள்தோறும் வளர்ந்து வருகிறது’’ என்றனர். ‘வென்றவன் சொல்வது வேதம்’ என்று பேரவையும் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் மட்டுமல்ல சில பத்திரிகைகளும் தமிழகத்தில் இருந்து தொழில்கள் இடம்பெயர்ந்து வருவதை எழுதி வந்தன. ஆனாலும் அதிமுக அமைச்சர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துவந்தனர்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘தமிழகத்தில் திறமையான இளைஞர்கள் இருந்தும் தொழில் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க யோசிக்கிறார்கள். தமிழகத்துக்கு வரும் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றன. எனவே, தமிழகத்துக்கு முதலீட்டாளர்கள் அதிகம் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார். இது ‘தி இந்து’ நாளிதழில் வெளியாகியுள்ளது.

கன்னத்தில் பளார் என அறைவதுபோல தமிழக அரசை சாடியிருப்பவர் சாதாரண நபர் அல்ல. மத்திய அமைச்சர். அதுவும் தொழில் துறை அமைச்சர். இந்தியா முழுவதும் தொழில் நிலையை அறிந்தவர். அதிலும் நிர்மலா சீதாராமன் மெத்தப் படித்தவர். தமிழகத்தைப் பற்றி அறிந்தவர். எதையும் ஆழ்ந்து சிந்தித்துப் பேசக் கூடியவர்.

அப்படிப்பட்டவரே, திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு செல்வதாகக் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் எப்படி புள்ளிவிவரங்களோடு பேசுகிறார்கள் என்பதை இனியாவது அனைவரும் தெரிந்துகொள்ளட்டும்.

அப்படிப்பட்டவரே, திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு செல்வதாகக் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் எப்படி புள்ளிவிவரங்களோடு பேசுகிறார்கள் என்பதை இனியாவது அனைவரும் தெரிந்துகொள்ளட்டும்.

இவ்வாறு அறிக்கையில் துரைமுருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x