அறிவிப்பு வெளியிட்டு 3 மாதங்களாகியும் ஒரு வீட்டுமனைகூட வரன்முறைப்படுத்தாத நிலை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு பணிகளை பிரித்து வழங்க மனமில்லை

அறிவிப்பு வெளியிட்டு 3 மாதங்களாகியும் ஒரு வீட்டுமனைகூட வரன்முறைப்படுத்தாத நிலை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு பணிகளை பிரித்து வழங்க மனமில்லை
Updated on
1 min read

உள்ளாட்சி அமைப்புகளுக்கு பணிகளை பிரித்து வழங்க நகரமைப்புத் துறை முன்வராததால், அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி 3 மாதங்கள் ஆகியும் இதுவரை ஒரு வீட்டுமனைகூட வரன்முறைப்படுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பான அரசாணை கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி அங்கீகாரமின்றி உருவாக்கப்பட்ட வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த விதிகள் வகுக்கப்பட்டதுடன், கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதுபோன்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்தும் பொறுப்பு நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம் (டிடிசிபி), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டன. அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த நவம்பர் 3-ம் தேதியே கடைசி நாள் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் இதுவரை ஒரு வீட்டுமனைகூட வரன்முறைப்படுத்தவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. தற்போது வரை சிஎம்டிஏ கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளில் உள்ள வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த சுமார் 3500 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அவை மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் நகரமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து இந்திய கட்டுநர் சங்கத் தலைவர் ராம்பிரபு கூறியதாவது: சிஎம்டிஏ-வில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அந்த விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அப்படியே வைக்கப்பட்டுள்ளன. சிஎம்டிஏ அல்லது டிடிசிபி விதிகளை வகுத்து அளிப்பதோடு நிறுத்திக் கொண்டால் பிரச்சினை இல்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு களஆய்வுப் பணிகளை வழங்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பொறியாளர்கள் அதிகம் என்பதாலும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு விண்ணப்பங்கள் செல்வதாலும் பணிச்சுமையும் குறையும். திட்டமும் நிறைவேறும்.

ஆனால் போதுமான அதிகாரிகள் இல்லாமல் விண்ணப்பங்களை சிஎம்டிஏ நிர்வாகம் வாங்கி வைத்துள்ளது. இதுவரை வரன்முறைப்படுத்தப்பட்ட வீட்டுமனை என்ற முத்திரை அளித்து ஒரு விண்ணப்பம் கூட தீர்க்கப்படவில்லை.

இதேநிலையே டிடிசிபி-யிலும் நிலவி வருகிறது. இதுபோன்ற நிலையால், வீட்டுமனைகளை வாங்குவது மற்றும் விற்பதில் சிக்கல் தொடர்கிறது.

இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். இல்லையென்றால் மனை உரிமையாளர்கள் அனுப்பும் விண்ணப்பங்கள் அனைத்தும் கிடப்பிலேயே இருக்கும். இந்த நிலை நீடித்தால் அரசுக்கும் பலனில்லை, பொதுமக்களுக்கும் பலனில்லை. இவ்வாறு ராம்பிரபு தெரிவித்தார்.

இதுகுறித்து நகரமைப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி ஆகியவற்றில் சுமார் 7 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். தற்போது தமிழகத்தில் சுமார் 13 லட்சம் அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in