Published : 21 Aug 2017 09:03 AM
Last Updated : 21 Aug 2017 09:03 AM

ஆட்சிக்கு பழனிசாமி - கட்சிக்கு ஓபிஎஸ்: அதிமுக அணிகள் இன்று இணைப்பு- பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்கவும் திட்டம்

அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைகின்றன. கட்சியை ஓ.பன்னீர் செல்வமும் ஆட்சியை முதல்வர் பழனிசாமியும் வழி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்னர் பொதுக்குழுவைக் கூட்டிக் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

அதிமுகவில் இரு அணிகள் இணைப்புக்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. அணிகள் இணைந்தால் கட்சியிலும், ஆட்சியிலும் ஓபிஎஸ் அணிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து வெள்ளிக்கிழமை போரூரில் ஓ. பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் பி.தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து நிபந்தனைகளை ஏற்று கொண்டதாகத் தெரிவித்தனர். அதன்பின் அன்று மாலையே, ஓபிஎஸ் இல்லத்தில் ஆதரவு எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அதேபோல், முதல்வர் பழனிசாமி வீட்டிலும் அமைச்சர்கள் ஆலோசித்தனர்.

ஓபிஎஸ் வீட்டில் நடந்த கூட்டத்தில், ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் அமைச்சர் ஒருவர், தான் பதவியை விட்டுவிட்டு வந்ததாகக் குறிப்பிட அதை மூத்த நிர்வாகி ஒருவர் கண்டித்துள்ளார். அதேபோல், சில முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். நம்பிப் பிரிந்து வந்து ஆதரவளிக்கும் கட்சியினருக்கும் தேவையான பாதுகாப்பு அளிக்கும் வகையில், பொறுப்புகள் இருக்க வேண்டும் என்றும் தங்கள் முடிவைத் தெரிவித்தனர்.

ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் உள்துறை, நிர்வாகம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறைகளை கேட் பது குறித்தும் செம்மலை, பாண்டியராஜன் ஆகிய இருவருக்கும் முக்கிய துறைகளின் அமைச்சர் பதவிகள் கேட்கப்படுவது குறித்தும் பேசப்பட்டது.

அதேபோல், முதல்வர் பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், வட மாவட்டத்தைச் சேர்ந்த சில அமைச்சர்கள் ஓபிஎஸ் தரப்புக்குத் துணை முதல்வர் பதவியுடன் மற்றும் கட்சியில் முக்கியத்துவம் அளிப்பதை எதிர்த்துள்ளனர். அதன்பின், தினகரன் தரப்பின் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி முதல்வர் பழனிசாமி அவர்களைச் சமாதானம் செய்துள்ளார்.

இதையடுத்து, ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கைகளை ஏற்பதாக, முதல்வர் பழனிசாமி தரப்பிலிருந்து, ஓபிஎஸ்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே, நேற்று முன்தினம் திருவாரூர் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமியும், சென்னையில் ஓபிஎஸ்ஸும் அணிகள் இணைப்பு உறுதி எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, இன்று மாலைக்குள் அணிகள் இணையும் என்று இரு அணி வட்டாரங்களும் தெரிவித்தன. இது தொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது:

ஓபிஎஸ்ஸுக்கு புதிய பதவி

அணிகள் இணைந்ததும், ஓபிஎஸ் கட்சி நிர்வாகத்தையும், முதல்வர் பழனிசாமி ஆட்சியையும் கவனித்துக் கொள்வார். கட்சியை நிர்வகிக்கக் குழு அமைக்கப்படும். குழுவின் தலைவராக ஓபிஎஸ் இருப்பார். அக்குழுவில் முதல்வர் பழனிசாமியும் முக்கிய பொறுப்பில் இருப்பார். இரு அணிகளைச் சேர்ந்த முக்கியமானவர்கள் அந்தக் குழுவில் இடம் பெறுகின்றனர். அமைச்சரவையில் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக விரைவில் ஆளுநரைச் சந்தித்து, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும். இரு அணிகளும் இணைந்ததும், ஓபிஎஸ் மற்றும் முதல்வர் பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் ஒன்றிணைந்து, பொதுக்குழுவை கூட்டி சசி கலாவை கட்சியை விட்டு நீக்குவது, அதற்கு முன்னதாகக் கட்சி சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வருவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாளை (இன்று) அணிகள் இணைந்ததும் கட்சி தலைமை அலுவலகத்துக்கு இரு தரப்பினரும் வந்து அடுத்தகட்ட முடிவுகள் குறித்து ஆலோசிக்கின்றனர். அதன்பின் கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x