Published : 07 Aug 2017 02:00 PM
Last Updated : 07 Aug 2017 02:00 PM

ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை உருவாக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

3-வது தேசிய கைத்தறி தின விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

''தாய்நாட்டின் மீது பற்றும், பாசமும் கொண்ட இந்தியர்கள் நிச்சயம் கைத்தறியை ஆதரிப்பார்கள். கைத்தறி ஆடையை அணிவார்கள்.கைத்தறித் தொழிலை ஊக்குவிப்பார்கள், கைத்தறி ஆடையை அணிந்து கொண்டால், உடலுக்கும் மனதிற்கும் ஒரு உற்சாகம் ஏற்படுகிறது. நானும் ஒரு இந்தியன் என்கிற உணர்வு தானாகவே ஏற்படுகிறது.

பிரிட்டிஷ் பொருள்களுக்கு எதிராக உள்நாட்டு பொருள்களை ஆதரிப்பது என்ற நோக்கத்துடன் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் கொல்கத்தாவில் சுதேசி போராட்டம் தொடங்கியது. அதை நினைவுகூரும் வகையில் 2015ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 15-ல் நடைபெறும் சுதந்திர தினத்திற்கு இந்த விழா ஒரு முன்னோட்டமாக, முன்மாதிரி விழாவாக நடைபெறுகிறது.

தேசிய கைத்தறி தினம் அறிவிக்கப்பட்டதன் மூலம் உலகளாவிய சந்தைக்கு பன்னாட்டு தரத்தில் கைத்தறி பொருட்கள் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க முடியும்.

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, கிராமப்புற மக்களுக்கு, கைத்தறித்தொழில் பெருமளவில் வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது.இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான கைத்தறி நெசவாளர்களின் நலன் காத்திட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

அதே போன்று, விசைத்தறி நெசவாளர்களின் நலனுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு எடுத்து வருகிறது.

நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து செயல்படத் தேவையான காசுக்கடன் வசதி மற்றும் நடைமுறை மூலதனம் ஆகியவை கிடைத்திடும் வகையிலான நடவடிக்கைகளை ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தும் இந்த அரசு எடுத்து வருகிறது.

கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகையின் போது, தமிழக அரசின் சார்பில் வேட்டி சேலை பெற்றிடும் வகையிலும், விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலம் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 11 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களுக்கும், 54 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

வரும் ஆண்டு பொங்கலுக்கு 3 கோடியே 36 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்க இருக்கிறோம். அரசுத் திட்டங்களான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம், விலையில்லா சீருடை வழங்கும் திட்டம், மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்தும் முகமை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் செயல்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டத்தால் இன்றைக்கு கோ-ஆப்டெக்ஸ் அரசுக்கு மட்டுமல்லாமல், தனியாருக்கும்,பொது மக்களுக்கும் செய்து வரும் விற்பனை, மெச்சக்கூடிய அளவில் உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, கைத்தறி நெசவாளர்களுக்கு இருமாதங்களுக்கு கட்டணமில்லாமல் 100 யூனிட் அளவுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் 200 யூனிட்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

கைத்தறித்துறைக்கும், நெசவாளர்களுக்கும் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்திய காரணத்தினால் தான் 1,156 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 964 சங்கங்கள் லாபத்தில் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், தொழில் உற்பத்தியிலும் ஜவுளித் தொழில், அதிலும் குறிப்பாக கைத்தறி முக்கிய பங்கு வகிக்கிறது.

கைத்தறித்துறையை மேம்படுத்தவும், நெசவாளர்கள் வாழ்வு வளம் பெறவும் பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா அரசு செயல்படுத்தி வருகிறது.நெசவாளர்கள் தங்கள் இல்லங்களில் வசதியாக கைத்தறிகள் மூலம் நெசவுத் தொழில் செய்யும் வகையில் 365 சதுர அடி பரப்பளவு கொண்ட சூரிய சக்தியுடன் கூடிய 10,000 பசுமை வீடுகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்டிக் கொடுத்தார்.

கைத்தறி நெசவாளர்களின் வேலைப்பளுவை குறைக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் மூலம் அவர்கள் கூடுதல் வருவாய் ஈட்டவும் அரை குதிரைத்திறன் மோட்டார் பொருத்தப்பட்ட பெடல் தறிகள் வழங்கப்படுகின்றன.

மின் மோட்டார் பொருத்திய தார் சுற்றும் இயந்திரங்கள் நெசவாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு மின்சார பாவு சுற்றும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கைத்தறி விற்பனைக்கு வழங்கப்படும் தள்ளுபடி மானிய நிதியானது 2017-2018ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 867 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பயனடைந்து வருகின்றன.

நெசவாளர்களின் உடல் நலத்திலும் ஜெயலலிதா அரசு அதிக அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது. நெசவாளர்கள் மற்றும் நெசவினை சார்ந்த உபதொழில் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டம் 2004ல் அறிமுகப்படுத்தப்பட்டது.நெசவாளர்கள் முத்ரா திட்டத்தின் மூலம் இதுவரை 18 அயிரத்து 340 நெசவாளர்களுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

திருச்சி, திருவண்ணாமலை, மற்றும் தூத்துக்குடியில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் 2 கோடி ரூபாயில் நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப ஜவுளி பிரிவிற்கு சிறப்பு கவனம் செலுத்த 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்பஅஹிம்சா ரக பட்டுகள் கோஆப்டெக்சில் அறிமுகப்படுத்தப்படும். இயற்கை சாயமிடப்பட்ட பருத்தி சேலை ரகங்கள், திண்டுக்கல், கோவை வதம்பசேரி, திருச்சி மணமேடு ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நெசவாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, அதிக உற்பத்தியும், விற்பனையும் பெற்றுத்தந்த மாநில அளவில் சிறந்த கைத்தறி நெசவாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், கைத்தறியில் பருத்தி மற்றும் பட்டு இரகங்களில் சிறந்த வடிவமைப்புகளை உருவாக்கும் திறன்மிகு கைத்தறி நெசவாளர்களுக்கு பரிசுகளும், தமிழ்நாட்டிலுள்ள சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் திட்டங்களும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் 2017-2018 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த நெசவாளர் விருதின் வெகுமதியாக ஒரு லட்சம் ரூபாய், சான்றிதழ் மற்றும் பொன்னாடை, திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம்.ஆர்.ராஜசேகரனுக்கும், சிறந்த வடிவமைப்பு மற்றும் தரத்துடன் கூடிய கைத்தறி ரகங்களை நெசவு செய்தமைக்காக மொத்தம் 60 நெசவாளர்களுக்கு ஆறு லட்சம் ரூபாய் அளவிற்கு திறன்மிகு கைத்தறி நெசவாளர் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்.இதேபோல ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை உருவாக்கப்படும்'' என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x