Published : 21 Aug 2017 12:09 PM
Last Updated : 21 Aug 2017 12:09 PM

தி இந்து செய்தி எதிரொலி: சுத்தமாகும் மணிமுக்தா ஆறு - களம் இறங்கிய பொதுமக்கள்

மணிமுக்தா ஆற்றை தூய்மை படுத்தும் பணியில் என்எல்சி நிறுவனம் மற்றும் 30-க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் களம் இறங்கின. இன்றும் இப்பணிகள் நடைபெறுகிறது.

விருத்தாசலம் நகரின் வழியாகச் செல்லும் மணிமுக்தா ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், ஆடிப்பெருக்கை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டதாக கடந்த 2-ம் தேதி தி இந்துவில் செய்தி வெளியானது.

ஆற்றை தூய்மை படுத்த திட்டம்

இதையறிந்த என்எல்சி நிறுவனமும், விருத்தாசலம் நகராட்சி மற்றும் விருத்தாசலம் மற்றும் நெய்வேலியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புகள் மற்றும் விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் ஆகியோர் மணிமுக்தா ஆற்றை தூய்மைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து என்எல்சி சமூக பொறுப்புணர்வுத் திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மணிமுக்தா ஆற்றை தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

பணிகள் தொடக்கம்

இதையடுத்து நேற்று தூய்மைப்படுத்தும் பணியை கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் முன்னிலையில், என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா தொடங்கி வைத்தார். இன்றும் இப்பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இணைந்த தன்னார்வ அமைப்புகள்

மணிமுக்தா ஆற்றுப் பாலத்திற்கு கீழ் 200 மீட்டர் அகலத்தில் 1.கி.மீ தூரத்துக்கு தூய்மைப் பணி நடைபெற்றது. இதில் என்எல்சி நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள், நெய்வேலியைச் சேர்ந்த ரத்தக் கொடையாளர் சங்கம், ராமகிருஷ்ணா சேவா சங்கம், பொதுத்துறையில் பணிபுரியும் பெண்கள் அமைப்பு, விருத்தாசலம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், விருத்தாசலத்தைச் சேர்ந்த ரோட்டரி, அரிமா சங்கம், பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவியர், காய்கறி விற்பனையாளர்கள் சங்கம், ஆட்டோ சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், நடிகர்கள் அஜீத் மற்றும் சிவ கார்த்திக்கேயன் ரசிகர் மன்றத்தினர் என 30-க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 2000 பேர் களப்பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் கூறும்போது, “நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.மணிமுக்தா ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என முதல்வரும் அறிவித்துள்ளார். இதற்கான அரசாணையும் அடுத்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. இதன் மூலம் ஆறு தூய்மையாக பராமரிக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் படகுப் போக்குவரத்துக்கும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

தொடர்ந்து பராமரிக்க வேண்டும்

இது குறித்து விருத்தாசலம் சுபாஷினி கூறுகையில், “25 ஆண்டுகளுக்கு முன்பு தூய்மையாக இருந்த பகுதி, தற்போது துர்நாற்றத்துடன் இருப்பது வேதனையாக இருக்கிறது. தற்போது சுத்தம் செய்வதோடு தொடர்ந்து சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்”என்றார்

இதையடுத்து ஜெயந்தி கூறுகையில், “ தி இந்து தமிழ் நாளிதழுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். நகராட்சி நிர்வாகம் இனி குப்பைகளை ஆற்றில் கொட்டுவதை தவிர்க்கவேண்டும்” என்றார்.

இதே போல் கஸ்தூரி கூறுகையில், “மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மணிமுக்தா ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x