Published : 29 Aug 2017 11:43 AM
Last Updated : 29 Aug 2017 11:43 AM

நீட் தேர்வில் ஊழல் மோசடி; நீதி விசாரணை தேவை: வைகோ கோரிக்கை

சென்னை ‘நீட்’ தமிழக மாநில தரவரிசைப் பட்டியலில் வெளி மாநில மாணவ/மாணவியர்கள் முறைகேடுகள் மூலம் பெற்ற இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில் உரிய நீதி விசாரணை தேவை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் இளநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்கான மாநில தரவரிசைப்பட்டியலை தமிழக சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டது. தமிழக மாணவ, மாணவியர்கள் சேருவதற்குரிய மருத்துவ இடங்களின் தரவரிசைப்பட்டியலில் கேரளா உள்ளிட்ட பிற மாநில மாணவ, மாணவியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

‘நீட்’ திணிப்பின் மூலம் ஏற்கனவே மருத்துவக் கனவு தகர்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தமிழக மாணவச் செல்வங்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குரிய தரவரிசைப் பட்டியலில் கிட்டதட்ட 150 வெளி மாநில மாணவ/மாணவியர் பெயர்களும் தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குரிய தரவரிசைப்பட்டியலில் கிட்டத்தட்ட 1000 மாணவ/மாணவியர்கள் பெயர்களும் இடம்பெற்றிருப்பது தனி மனித தவறுதலாலோ கணினி தொழிற்நுட்ப தவறுதலாலோ நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இதில், அரச நிர்வாகத்தினர் உட்பட சுகாதாரத்துறை அமைச்சர் வரையிலான தொடர்பு இருக்கவே வாய்ப்பு உள்ளது.

மருத்துவக் கல்லூரிக்குரிய தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்கள் இருப்பிடச் சான்றிதழ் பெறுவதற்குரிய வழிகாட்டுதல்கள் பற்றி தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையிலும் போலியான வீட்டு முகவரி கொடுக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டால் அம் மாணவ/மாணவி தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, கிரிமினல் குற்றமாக கருதி தண்டனை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு, சமீபத்தில் 9 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு ஒரு கோடி வரை செலவாகும். தமிழக அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைந்த செலவே ஆகும் என்ற நிலையில் ‘போலி’ இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழகத் தரவரிசைப் பட்டியலில் பிற மாநில மாணாக்கர்கள் இடம்பெற்றிருப்பதைக் காணும்பொழுது, மிகப்பெரிய ஊழல் நடந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நீட் தேர்வு ஏற்கனவே சமூகநீதி, மாநில உரிமைகள் என அனைத்தையும் குழித்தோண்டிப் புதைத்துக்கும் என்று நாம் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் நம் மாணாக்கர்கள் பாதிக்கப்படுவதோடு நம் மாநில நிர்வாகம் மற்றும் கல்வித்தரம் மிகக் கீழ்த்தரமாக செயல்பட இத்தகைய ஊழல்கள் வழிவகுக்கும் என்ற கவலையும் வருகிறது.

தரவரிசைப்பட்டியலில் இத்தகைய முறைக்கேடு சாத்தியம் என்றால் நீட் தேர்வு நடத்துவதிலும் முறைகேடுகள் சாத்தியம்தானோ என்ற சந்தேகிக்கத் தோன்றுகிறது.

போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து விண்ணபித்த 9 மாணவர்களை சுகாதாரத்துறை நிர்வாகம் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தது வெறும் கண்துடைப்பு நாடகமே! வெளி மாநிலத்தை சேர்ந்த 1000 மாணவ, மாணவியர்கள் தமிழகத் தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறித்து முறையான நீதி விசாரணைத் தேவை.

அதுவரை தமிழக அரசுக்கல்லூரிகளில் மருத்துவ கல்விக்கான கலந்துரையாடலை நிறுத்தி வைக்க வேண்டும். இம்முறைகேடுகளால் தங்களுக்குரிய மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கப்பெறாமல் பாதிக்கப்பட்டு பெறும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தமிழக மாணவ, மாணவியர்களுக்கு உரிய நஷ்டஈட்டை தமிழக சுகாதாரத்துறை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x