Published : 30 Aug 2017 09:15 AM
Last Updated : 30 Aug 2017 09:15 AM

ஆளுநருடன் திருநாவுக்கரசர் சந்திப்பு: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வலியுறுத்தல்

தமிழக ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவை தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று சந்தித்துப் பேசினார்.

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது வரும் செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள தனது மகள் திருமணத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். நடப்பு அரசியல் நிலவரம் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:

எனது மகள் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஆளுநரை சந்தித்தேன். தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் நிலவரங்கள் குறித்து அவரிடம் பேசினேன்.

19 எம்எல்ஏக்கள் ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதால் முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ், திமுக சார்பில் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்.

இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்துவது நல்லதல்ல. எனவே, உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினேன்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவும், அதனைத் தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகளும் அவர்களது உட்கட்சி பிரச்சினை. அதில் வேறொரு கட்சியைச் சேர்ந்த நான் தலையிட விரும்பவில்லை.

ஆனால், நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டால் மட்டுமே தற்போதுள்ள குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x