

ஓபிஎஸ் அணியின் ஆர்ப்பாட்டம் மீண்டும் ஒத்திவைப்பு சென்னை பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தமிழக அரசைக் கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் தலைமை யில் சென்னையில் கடந்த 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருந்தது.
அதற்கு காவல்துறை அனுமதி வழங்காததால் அந்த ஆர்ப்பாட்டம் 18-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: புதுக்கோட்டையில் வரும் 19-ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனை நடைபெற உள்ளது. எனவே வரும் 18-ம் தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என தினகரன் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம், அவர் எங்களுடைய தர்ம யுத்தத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகளுக்கிடையிலான இணைப்பு பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை பன்னீர்செல்வம் தரப்பினர் மீண்டும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.