Last Updated : 11 Aug, 2017 05:42 PM

 

Published : 11 Aug 2017 05:42 PM
Last Updated : 11 Aug 2017 05:42 PM

டெல்லியில் தமிழக முதல்வருடன் விவசாயிகள் மீண்டும் சந்திப்பு

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தனர்.

முதல்வர் பழனிசாமி, குடியரசு துணைத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளும் முன் இந்த சந்திப்பு நடைபெற்றது.

விவசாயிகள் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, கூடுதல் வறட்சிக்கான நிதி என்பது உட்படப் பல்வேறு கோரிக்கைகளுடன் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். கடந்த ஜூலை 16-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்தப் போராட்டம், பி.அய்யாகண்ணு தலைமையிலான தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் இரண்டாம் கட்டமாக  தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி வந்திருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பு, புதிய குடியரசு துணைத் தலைவரான எம்.வெங்கய்ய நாயுடு பதவி ஏற்பு விழாவிற்கு முதல்வர் கிளம்பிய போது நடைபெற்றது.

இது குறித்து 'தி இந்து'விடம் அய்யாகண்ணு கூறுகையில், ''கடந்த மார்ச்சில் நாங்கள் துவங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தை முதல்வரை நம்பிக் கைவிட்டதை நினைவுகூர்ந்தோம். இதற்கு அவர் எங்கள் கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் போது வலியுறுத்துவதாக உறுதியளித்தார்.

மருதை ஆற்றில் அணைகட்டி, அதன்மூலமாகக் கரை வெட்டி பறவைகள் சரணாலாயத்திற்கு இணைக்கும் திட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட திருச்சுழியின் குண்டாறு திட்டமும் அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்தார்'' எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, கடந்த 9-ம் தேதி முதல் 6 விவசாயிகள் காலவரம்பற்ற உண்ணாவிரதம் தொடங்கி இருந்தனர். இவர்களில், பல்லடத்தைச் சேர்ந்த நாராயணசாமி நாயுடு (84) என்பவர் மட்டும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார். தமிழக முதல்வருடனான விவசாயிகளின் சந்திப்பிற்குப் பின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரையும் விவசாயிகள் சந்தித்தனர். விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும் என திருநாவுக்கரசர் விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x